Published : 10 Jul 2021 03:51 PM
Last Updated : 10 Jul 2021 03:51 PM

சொத்துப் பிரச்சினையில் தந்தையைக் கொன்ற மகன்: ஆயுள் தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்

சென்னை

சொத்துப் பிரச்சினையில் தந்தையை மண்வெட்டியால் தாக்கிக் கொன்ற மகனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

கோவை மாவட்டம், தளவாய்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மயில்சாமி, தனது மனைவி, மகன், மருமகள் மற்றும் பேத்தியுடன் வசித்து வந்தார். மயில்சாமியின் மகன் கனகராஜ் குடித்துவிட்டு வந்து அடிக்கடி தந்தையிடம் தகராறு செய்து வந்துள்ளார். 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி வழக்கம் போல் கனகராஜ் குடித்துவிட்டுத் தகராறு செய்துள்ளார். இதனால் தந்தைக்கும், மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

குடும்பச் சொத்தில் தனக்கான பங்கைப் பிரித்துக்கொடுக்க வேண்டும் என கனகராஜ் தந்தையிடம் தகராறு செய்துள்ளார். இப்படிக் குடித்துவிட்டு ஊதாரித்தனமாகத் திரிந்தால் இருக்கும் சொத்தையும் அழித்துவிடுவாய், சொத்து எதையும் தரப்போவதில்லை என மயில்சாமி, கனகராஜிடம் கூறியிருக்கிறார்.

இதனால் ஆத்திரத்துடன் இருந்த கனகராஜ், தென்னந்தோப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தந்தை மயில்சாமியை மண்வெட்டியால் அடித்துக் கொன்றுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த கோவை நீதிமன்றம், கனகராஜுக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து கனகராஜ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆர்.பொங்கியப்பன் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் பல்டி அடித்து விட்டதாலும், வழக்குத் தொடர்பான ஆவணங்கள் தாமதமாக நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாலும் சந்தேகத்தின் பலனை கனகராஜுக்கு வழங்க வேண்டும் என அவர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், நேரில் பார்த்த சாட்சிகள் பல்டி அடித்திருந்தாலும், கனகராஜின் மனைவியும், மாமனாரும் நடந்த சம்பவத்தை விளக்கி சாட்சியம் அளித்துள்ளதாகவும், ஆவணங்களை உடனடியாக நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்காததால் இந்தச் சம்பவத்தை நம்ப முடியாது எனக் கூற முடியாது எனக் கூறி, மேல்முறையீட்டு வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

கனகராஜுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x