

பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், வீட்டில் முடங்கிக் கிடந்த சைக்கிள்களை சீரமைத்துக் கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சைக்கிளில் இருந்து மோட்டார் சைக்கிள்களுக்கு மக்கள் மாறியதால், சைக்கிள்களின் பயன்பாடு குறைந்தது.
ஒரு கட்டத்தில் வயதானவர்கள், சிறுவர்களே சைக்கிள்களை பயன்படுத்தி வந்தனர்.
தற்போது, பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவுக்கு லிட்டர் ரூ.100-ஐ விட உயர்ந்துள்ளதால் சாதாரண மக்கள் மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
விளைபொருட்களின் விலை உயர்வில்லாமல், கூலியும் உயராத நிலையில் அதிக விலைக்கு பெட்ரோல் நிரப்பிக்கொள்ள முடியாத சூழல் நிலவி வருவதால், மோட்டார் சைக்கிள், பைக்குகளில் பயணிக்க முடியாத அளவுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், மோட்டார் சைக்கிள்களை ஓரங்கட்டிவிட்டு ஏற்கெனவே வீடுகளில் முடங்கிக் கிடந்த சைக்கிள்களை சீரமைத்து பயன்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து, புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தைச் சேர்ந்த சைக்கிள் மெக்கானிக் பி.மணிவாசகம் கூறுகையில், "நான் கடந்த 38 ஆண்டுகளாக சைக்கிள் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். இடையில் சுமார் 8 ஆண்டுகள் சைக்கிள் வாடிக்கையாளர்கள் வராததால் தொழில் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது, பெட்ரோல் விலை உயர்ந்து வருவதையடுத்து, சில ஆண்டுகளாக ஓட்ட முடியாமல் கிடந்த சைக்கிள்களை கொண்டு வந்து பழுது நீக்கிச் செல்கின்றனர்.
நாளொன்றுக்கு ஒரு சைக்கிள் மட்டுமே பழுதுநீக்கப்பட்டு வந்த நிலை மாறி, தற்போது ஓய்வின்றி இரவு, பகல் பாராமல் வேலை செய்து வருகிறேன். சைக்கிள் உதிரிபாகங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, அவற்றின் விலையும் உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். புதிய சைக்கிள் விற்பனையும் அதிகரித்துள்ளது. மீண்டும் சைக்கிளுக்கு மக்கள் மாறிவருவது உடலுக்கு ஆரோக்கியமானது" என்றார்.