கடந்த 12 ஆண்டுகளில் குடமுழுக்கு நடத்தப்படாத கோயில்களில் விரைவில் குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று ஆய்வு மேற்கொண்ட அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று ஆய்வு மேற்கொண்ட அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு.
Updated on
2 min read

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (ஜூலை 10) ஆய்வு மேற்கொண்டார்.

திருக்கோயிலுக்கு வந்த அமைச்சருக்கு பட்டாச்சாரியார்கள் பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, அவர் கோசாலையைப் பார்வையிட்டார். மாடுகளை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் அறிவுறுத்தினர்.

பின்னர், கோயிலில் உள்ள தானிய கொட்டாரத்தைப் பார்வையிட்டார். தொடர்ந்து, பெருமாள், தன்வந்திரி, தாயார் சன்னதிகளில் தரிசனம் செய்தார்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

"இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கடந்த பத்தாண்டுகளில் கேட்பாரற்று, பராமரிக்கப்படாமல் உள்ள கோயில்களில் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால் குடமுழுக்கு உள்ளிட்டவை நடைபெறவில்லை.

கடந்த 2 மாதங்களில் திருக்கோயிலுக்கு நேரடியாகச் சென்று துறை சார்ந்த செயலாளர், துறை சார்ந்த ஆணையர், மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர் ஒன்றுசேர்த்து, தமிழகம் முழுவதும் பார்வையிட்டு குடமுழுக்கு, பராமரிப்புப் பணிகளையும் விரிவுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 12 ஆண்டுகளில் குடமுழுக்கு நடத்தப்படாத கோயில்களின் எண்ணிக்கையைக் கண்டறிந்து, விரைவில் குடமுழுக்கு நடத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள கோசாலையைச் சிறப்பாகப் பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயில் அருகே உள்ள இடத்தைத் தேர்வு செய்து, அங்கு மேலும் ஒரு கோசாலையை ஏற்படுத்திப் பராமரிப்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.

கடந்த ஆட்சியில் 2011 மற்றும் 2020 ஆண்டுகளில் கோயிலில் பணியாற்றும் தற்காலிகப் பணியாளர்கள் நிரந்தரப்படுத்தப்படுவார்கள் என அறிவித்தனர். 5 ஆண்டுகள் தற்காலிகமாகப் பணிபுரிந்த பணியாளர்களின் விவரம் பெற்று, அதற்குரிய கருத்துரு பெற்று ஒரு மாதத்தில் பணி நிரந்தரம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். பணி நிரந்தரம் செய்த பிறகு இருக்கும் காலிப் பணியிடங்களில் மற்றவர்களைப் பணியமர்த்தும் பணிகள் செயல்படுத்தப்படும்.

அர்ச்சகர்கள், நாவிதர்கள் உள்ளிட்ட அனைத்து காலிப் பணி இடங்களும் கண்டறியப்பட்டுப் பணியமர்த்தப்படும். சிலைகள் மாயமான வழக்குகளில் உண்மை தன்மை இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கோயில் இடங்களில் கடைகள், குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. குடியிருப்பவர்கள் உரிய மனு அளித்தால் வாடகைதாரர்களாக ஏற்றுக் கொள்ளப்படும். இது தொடர்பான நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கருணை அடிப்படையில் பணி நியமனம் குறித்து, அதற்கு உரிய பரிந்துரை பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஓய்வூதியப் பட்டியலில் உள்ளவர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் அளிக்கப்படும். ஒய்வூதிய உயர்வு குறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்.

ஸ்ரீரங்கம் கோயில் சார்ந்த உப கோயில்களில் தொல்லியல் துறை அனுமதி பெற்று அனைத்துக் கோயில்களிலும் விரைவில் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்".

இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, ஸ்ரீரங்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கு.பழனியாண்டி, திமுக பகுதிச் செயலாளர் ராம்குமார், ஒன்றியச் செயலாளர் மல்லியம்பத்து கதிர்வேல் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலிலும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in