இழுவை வலைகளுக்கு எதிர்ப்பு; படகுகளில் பேரணி சென்று சுருக்குமடி வலை மீனவர்கள் மனு

படகுகளில் கருப்புக் கொடி கட்டிக் கொண்டு கடலில் ஊர்வலமாக சென்ற மீனவர்கள்.
படகுகளில் கருப்புக் கொடி கட்டிக் கொண்டு கடலில் ஊர்வலமாக சென்ற மீனவர்கள்.
Updated on
1 min read

இழுவை வலைகள் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுருக்குமடி வலை பயன்படுத்தும் மீனவர்கள் நேற்று கடலூரில் படகுகளில் கறுப்புக்கொடி கட்டி கடலில் பேரணியாக சென்று மீன்வளத்துறையினரிடம் மனு அளித்தனர்.

49 மீனவ கிராமங்களை உள்ளடக்கிய கடலூர் மாவட்டத்தில், நாட்டுப் படகு, கட்டுமரம், எஞ்ஜின் பொருத்தப்பட்ட பெரிய படகுகள், பைபர் படகுகள் என, சுமார் 10 ஆயிரம் படகுகள் உள்ளன. இதில், தேவனாம்பட்டினம் உள்ளிட்ட சில மீனவ கிராமத்தினர் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி வந்தனர். இதற்கு மற்ற மீனவ கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், மாவட்ட நிர்வாகம் சுருக்குமடி வலைக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறும் சுருக்குமடி வலை மீனவர்கள், தற்போது தங்களுக்கு எதிராக புகார் கூறி வரும் மீனவர்கள், அரசால் நிர்ணயிக்கப்பட்ட அளவீட்டை விட கூடுதலாக படகு வைத்திருப்பது, சுருக்குமடி வலைகள் போன்ற இழுவை வலைகளை பயன்படுத்துவது, அதிக திறன் கொண்ட எஞ்ஜின்களை பயன்படுத்தி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் என்று புகார் தெரிவித்து வருகின்றனர்.

அதனை வலியுறுத்தி, தேவனாம்பட்டினம் மீனவ கிராமத்தினர் நேற்று (ஜூலை 09) சுமார் 50 படகுகளில் கருப்புக் கொடி கட்டி, உப்பாறு வழியாக செல்லங்குப்பத்தில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு சென்றனர். மீனவர்கள் வருவதை அறிந்து அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இதையடுத்து, மீனவர்கள் இணை இயக்குநர் காத்தவராயனை சந்தித்து மனு அளித்தனர். அப்போது, இழுவை வலை, அதிக திறன் கொண்ட எஞ்ஜின்களை பயன்படுத்தி மீன்பிடிப்பதை 2 நாட்களுக்குள் தடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் தாங்கள் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்போம் என்று தெரிவித்து விட்டு, மீண்டும் படகில் தேவனாம்பட்டினம் திரும்பினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in