

புதுச்சேரி கிராமப் பகுதிகளான கொடாத்தூர், மணவெளி, சுத்துகேணி, சந்தை புதுக்குப்பம், கைக்கலம்பட்டு, குமாரப்பாளையம், காட்டேரிக்குப்பம் ஆகிய கிராமங்களில் 500 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் சாகுபடி செய்து, நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தன.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு தொடங்கி அதிகாலை வரை காற்றுடன் கூடிய கனமழை புதுச்சேரியில் பெய்தது. இந்த மழையில் அறுவடைக்குதயாரான நிலையில் இருந்த நெற்பயிர்கள் சரிந்து சேதமடைந்தன. வயல்களில் மழை நீர் தேங்கி நிற்கின்றன.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறும்போது, “திடீர் மழையால் 500 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த இருமுறையும் இதேபோல் நெற்பயிர் பாதிக்கப்பட்டது. ஆனால் இம்முறை பயிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தன. அந்த நேரத்தில் இப்படிஆகிவிட்டது. இதனால் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
பல இடங்களில் வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டும், தூர்வாராததால் மூடியும் உள்ளன. இதனால் சிறு மழைக்கும் நீர் வடியாமல் வயல்வெளிகளில் நீர் தேங்கிநிற்கின்றன. அரசு அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து இழப்பீடு பெற்று தர வேண்டும். ஒவ்வொரு முறையும் வடிகால் வாய்க்காலை சரிசெய்து தருமாறுஅரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். இம்முறையாவது அரசு எங்களுக்கு உதவ வேண்டும்” என்று தெரிவித்தனர்.