

திண்டுக்கல்லில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கடந்த 6-ம் தேதி மாலை பேகம்பூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பெட்ரோல், டீசல், காஸ் என ஒரு பதாகையில் எழுதி, அதை பாடை கட்டி தூக்கி ஊர்வலமாகச் சென்றனர். உடன் மயானத்துக்கு ஈமக்கிரியை செய்ய ஒரு சிறுவன் செல்வதுபோல் அவருக்கு நாமமிட்டு, மாலை அணிவித்து, கையில் சட்டியைக் கொடுத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு திண்டுக்கல் மாவட்ட இந்து முன்னணி அமைப்பினர், இதில் தொடர்புடையோர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாரை வலியுறுத்தினர். இதுகுறித்து திண்டுக்கல் நகர் டிஎஸ்பியிடம் இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் வீரதிருமூர்த்தி புகார் அளித்தார்.
அதில், திண்டுக்கல்லில் தமுமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தை இழிவுபடுத்தும் விதமாக மனநலம் பாதித்த ஒரு சிறுவனின் நெற்றி மற்றும் உடலில் நாமத்தை வரைந்து, அவரை ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவராக அடையாளப்படுத்தி உள்ளனர்.
இது குறிப்பிட்ட மதத்தினரின் மனதைப் புண்படுத்தி உள்ளது. மதக் கலவரத்தைத் தூண்டும் விதமாகவும், சட்டம், ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்தச் செயலில் ஈடுபட்ட தமுமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து பள்ளபட்டி கிராம நிர்வாக அலுவலர் லோகநாதன் அளித்த புகாரின்பேரில் மத துவேஷத்தை ஏற்படுத்தியதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திண்டுக்கல்லைச் சேர்ந்த தமுமுக பிரச்சாரப் பிரிவு நகர் செயலாளர் அப்துல் ஹக்கீம்(31), முஜிபுர் ரகுமான்(26), முகமது பெரோஸ்(22) மற்றும் சிறுவனை அழைத்துவந்த பொன்னுச்சாமி(26) ஆகியோரை திண்டுக்கல் நகர் தெற்கு போலீஸார் கைது செய்தனர்.