

கோவையில் மேற்கு புறவழிச் சாலை திட்டப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி, நீண்ட தாமதத்துக்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து முக்கிய நகரங்களில் ஒன்றான கோவையில், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், நகரில் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் அதிகரிக்கின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில், பாலக்காடு சாலை மதுக்கரையில் தொடங்கி, சுண்டக்காமுத்தூர், பேரூர் செட்டிபாளையம், தீத்திபாளையம், மாதம்பட்டி, பேரூர் மேற்கு சித்திரைச்சாவடி, கலிக்கநாயக்கன்பாளையம், சோமையம்பாளையம், வடவள்ளி, பன்னிமடை, குருடம்பாளையம், நஞ்சுண்டாபுரம் வழியாக நரசிம்ம நாயக்கன்பாளையத்தில் முடிவடையும் வகையில் மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
மொத்தம் 32.43 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.320 கோடி மதிப்பில் புறவழிச்சாலை அமைப்பதற்கான அரசாணை கடந்த 2016-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இத்திட்டப் பணிக்காக 16 கிராமங்களில் இருந்து 355 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. நில உரிமையாளர்களுக்கு, அரசு வழிகாட்டு மதிப்பில் இருந்து, கட்டிடங்களுக்கு மூன்றரை மடங்கும், மரம் உள்ளிட்டவற்றுக்கு இரண்டரை மடங்கும் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு எந்த பணிகளும் தொடங்கவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக இத்திட்டம் கிடப்பில் கிடந்தது.
இந்நிலையில், இத்திட்டத்தை மூன்று கட்டங்களாக செயல்படுத்த அரசு முடிவு செய்தது. முதல்கட்ட திட்டப் பணி மேற்கொள்ளப்பட உள்ள 11 கிமீ., தூரத்துக்குட்பட்ட 210 நில உரிமையாளர்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்துவதற்காக, ரூ.158 கோடி நிதியை கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, நிலம் கையகப்படுத்தும் பணி விறுவிறுப்படைந்துள்ளது.
இதுதொடர்பாக சமூக செயல்பாட்டாளர்கள் கூறும்போது, ‘‘நீலகிரியில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள், மாநகருக்குள் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேற்கு புறவழிச் சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டால், மாநகருக்குள் வரும் வாகனங்களின் எண்ணிக்கை குறையும். விபத்துகள், போக்குவரத்து நெரிசல் குறையும். இத்திட்டத்தை விரைவில் தொடங்க வேண்டும். மேற்கண்ட பகுதிகளின் பசுமைச்சூழல் மாறாத வகையில் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்’’ என்றனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் கூறும்போது, ‘‘இத்திட்டப்பணி மேற்கொள்ளப்படும் கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி, வருவாய்த் துறையால் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை 120 நில உரிமையாளர்களுக்கு ரூ.35 கோடி அளிக்கப்பட்டு 30 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பேரூர் செட்டிபாளையம், தீத்திபாளையம் பகுதிகளில் உள்ள 40 நில உரிமையாளர்களிடம் இருந்து ரூ.5 கோடி மதிப்பில் நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் கிராமங்களில், இதுவரை 50 சதவீதம் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. 80 சதவீதம் நிலம் கையகப்படுத்தப்பட்ட பின்னர், புறவழிச் சாலை திட்டப் பணி தகுந்த நிறுவனம் மூலம் அடுத்த சில மாதங்களில் தொடங்கும்’’ என்றார்.