

உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பால பணிகளுக்காக வெட்டப்பட இருந்த 15 வயதுடைய புங்கன் மரம் நேற்று வேருடன் தோண்டி எடுக்கப்பட்டு மறுநடவு செய்யப்பட்டது.
கோவை உக்கடம், கரும்புக்கடை, ஆத்துப்பாலம் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேம்பால பணிகள் ஓரளவு நிறைவு பெற்றுள்ள நிலையில், கரும்புக்கடை பகுதியில் தவிர்க்க இயலாத சூழலில் வெட்டப்படும் நிலையில் உள்ள 5 மரங்களை மறுநடவு செய்ய நெடுஞ்சாலைத் துறை, மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டனர்.
தன்னார்வ அமைப்பினருடன் இணைந்து மரங்களை தோண்டி மறுநடவு செய்யும் பணி நேற்று தொடங்கியது. அதன்படி, புங்கன் மரம் நேற்று வேருடன் தோண்டி எடுக்கப்பட்டு, லாரியில் ஏற்றி வெள்ளலூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகே கொண்டு சென்று மறுநடவு செய்யப்பட்டது.
இதுகுறித்து, ‘மரங்களுக்கு மறுவாழ்வு’ என்ற தன்னார்வ அமைப்பின் தலைவர் சையது ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, “சாலை விரிவாக்கம், மேம்பாலம் கட்டுதல் உள்ளிட்ட பணிகளில் தவிர்க்க முடியாத சூழலில் வெட்டப்படும் மரங்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் மறுநடவு செய்து வருகிறோம். உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பால பணிக்காக அங்கிருந்த புங்கன், வாதமடக்கி, இயல்வாகை, பூவரசன் மற்றும் மா என 5 மரங்களை வெட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதில் புங்கன் மரத்தை வெள்ளலூரில் மறுநடவு செய்துள்ளோம். அடுத்து வாதமடக்கி, இயல்வாகை மரங்கள் பாரதியார் பல்கலைக் கழக வளாகத்துக்கு கொண்டு செல்லப்படவுள்ளன. பூவரசன் மரம் வெள்ளலூரிலும், மா மரம் கரும்புக்கடை பகுதியிலும் மறுநடவு செய்யப்படவுள்ளன” என்றார்.