தமிழகத்தில் மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை கொண்டுவர வேண்டும்: தமிழியக்கம், தமிழர் சமூக மேம்பாட்டு பேரவை கோரிக்கை

தமிழகத்தில் மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை கொண்டுவர வேண்டும்: தமிழியக்கம், தமிழர் சமூக மேம்பாட்டு பேரவை கோரிக்கை
Updated on
1 min read

தமிழகத்தில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று தமிழியக்கம், தமிழர் சமூக மேம்பாட்டுப் பேரவை வலியுறுத்தியுள்ளது.

இந்த அமைப்பின் செயலாண்மைக் குழுக் கூட்டம் இணையவழியில் நடைபெற்றது. தமிழியக்கநிறுவனத் தலைவர் கோ.விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழர் சமூக மேம்பாட்டுப் பேரவைச் செயலர் எம்.ஜி.தேவசகாயம், மக்களவை உறுப்பினர் ரவிக்குமார், சாலமன் பாப்பையா, கவிஞர் வைரமுத்து, கவிஞர் கலி பூங்குன்றன், நாஞ்சில் சம்பத், ஜெகத்கஸ்பர், பழ.கருப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

2013-ல் மகாராஷ்டிர அரசும், 2017-ல் கர்நாடக அரசும் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றின. கர்நாடகத்தில் 2020-ல் பாஜக அரசு அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. எனவே, தமிழகத்திலும் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை திமுக அரசு கொண்டுவர வேண்டும்.

உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பொறுப்பேற்கும்போது, உறுதிமொழி ஆவணங்களில் 11 இந்திய மொழிகளில் மட்டுமே கையொப்பமிட இயலும். இந்திய மொழிகள் அனைத்தும் சமமாக மதிக்கப்பட வேண்டும். எனவே, நீதியரசர்கள் அவரவர் தாய்மொழியிலேயே கையொப்பமிடும் வகையில், மத்திய அரசு சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பேசிய கோ.விசுவநாதன், “அரசு, அரசியல் கட்சிகள், பொது மக்களுக்கு சமூகம் சார்ந்த சிக்கலுக்கான தீர்வுகளைப் பரிந்துரையாக வழங்கவேண்டி, சமூக மேம்பாட்டுப் பேரவையைத் தொடங்கியுள்ளோம். 160 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள். 114 நாடுகளில் தமிழர்களுக்கு குடியுரிமை கிடைத்துள்ளது.

எனவே, வெளி மாநிலம், வெளி நாடுகளில் வாழும் தமிழர்கள் நலனுக்காக தனி அமைச்சகம் உருவாக்கி, தனி அமைச்சரை நியமிக்க வேண்டும். வகுப்புவாரி இடஒதுக்கீட்டால் எந்த அளவுக்குப் பயனடைந்திருக்கிறோம் என்றஆய்வை மேற்கொள்ள வேண்டும். மதம், சாதி ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டதாக அரசு இயங்க வேண்டும்.

மதம் மேலாதிக்கம் செய்யும் நாடுகளில் மனித வளர்ச்சி குறியீடு குறைவாக இருக்கிறது. கலப்புத் திருமணம்தான் சாதியை ஒழிக்க வழி. எனவே, கலப்புத் திருமணம் செய்துகொள்பவர்களுக்கு அரசு அனைத்து முன்னுரிமைகளையும் வழங்க வேண்டும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in