

காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள சரிகை ஆலையின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள தமிழ்நாடு சரிகை ஆலை, காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் நெசவு செய்யும் இல்லங்கள், காந்தி சாலையில் உள்ள பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க விற்பனை நிலையங்கள் ஆகிய இடங்களில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் உள்ள பாதிப்புகள் மற்றும் குறைகளை களைவதற்கு ஒவ்வொரு பகுதியாகச் சென்று ஆய்வு செய்து வருகிறோம். அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு சரிகை ஆலையில் ஆய்வு மேற்கொண்டேன். இந்த ஆலையில் தற்போது 3,000 மார்க் சரிகைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதை 4,550 மார்க் சரிகையாக உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓரிக்கையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா குடியிருப்பில் நெசவாளர்கள் பட்டு சேலை நெசவு செய்வதை பார்வையிட்டேன்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்
அவர்களின் கோரிக்கைகள்,அவர்களுக்கு வழங்கப்படும் கூலிதொடர்பாகவும் கேட்டுள்ளேன்.அவர்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு நிறைவேற்றப்படும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அரசு முதன்மைச் செயலர் அபூர்வா, கைத்தறி மற்றும் துணிநூல் துறை ஆணையர் பீலா ராஜேஷ், கோ-ஆப்-டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் டி.பி.ராஜேஷ், மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, மக்களவை உறுப்பினர் க.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை இணைஇயக்குநர்கள் கிரிதரன், மகாலிங்கம், துணை இயக்குநர் கணேசன் உட்பட பலர் உடன் இருந்தனர்.