தமிழக வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு ரூ.1,774 கோடி ஒதுக்கீடு

தமிழக வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு ரூ.1,774 கோடி ஒதுக்கீடு
Updated on
1 min read

தமிழகத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணமாக மத்திய அரசு ரூ.1,774 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண உதவி வழங்குவது தொடர்பான உயர்நிலைக் குழு கூட்டம், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் திங்களன்று நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, உள்துறை செயலாளர் ராஜீவ் மேஹ்ரிஷி மற்றும் உள்துறை, நிதி, வேளாண்மை அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதில் வெள்ளம், வறட்சியால் பாதிக்கப்பட்ட 7 மாநிலங்களுக்கு ரூ.4,087.27 கோடியை பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (என்டிஆர்எப்) வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. வெள்ளம், வறட்சியால் பாதிக்கப்படும் மாநிலங்கள், பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிவாரண உதவி வழங்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும்.

இதையடுத்து, மத்திய குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி அறிக்கையை சமர்ப்பிப்பார்கள். அதை இந்த உயர்நிலைக் குழு ஆய்வு செய்து எவ்வளவு நிதியை ஒதுக்குவது என்பது குறித்து முடிவு செய்யும். இதன்படி, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழகத்துக்கு ரூ.1,773.78 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானுக்கு ரூ.1,177.59 கோடியும், ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு ரூ.336.94 கோடியும் வழங்க இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

அதேபோல், ஆந்திராவுக்கு ரூ.280.19 கோடியும், அசாமுக்கு ரூ.332.57 கோடியும், இமாச்சலப் பிரதேசத்துக்கு ரூ.170.19 கோடியும், நாகாலாந்துக்கு ரூ.16.02 கோடியும் வழங்க இக்குழு ஒப்புதல் வழங்கியது.

இந்த ஆண்டு ஜார்க்கண்ட், ராஜஸ்தான், ஆந்திரா உள்ளிட்ட 10 மாநிலங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டன. இந்த மாநிலங்களில் பருவ மழை வழக்கத்தைவிட 14 சதவீதம் குறைவாக இருந்தது.

மாறாக, தமிழகத்தில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடும் இழப்புகள் ஏற்பட்டது.

வரும் ஏப்ரல், மே மாதங்களில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வெள்ள நிவாரணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in