

மாநகராட்சி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் வழக்கை முடிக்கக் கோரி புகார் அளித்த மாணவி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள் இறுதி விசாரணையை ஜூலை 22-க்கு ஒத்திவைத்தனர்.
மதுரை ஆரப்பாளையம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர் விஜய் மீது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கரிமேடு போலீஸார் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி, ஜெயச்சந்திரன் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற் கெனவே விசாரணைக்கு வந்த போது, ஆசிரியர் மீதான பாலியல் வழக்கில் 3 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் விஜய் மீது புகார் அளித்த மாணவி, உயர் நீதிமன்றக் கிளையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆங்கில ஆசிரியர் எந்த தவறும் செய்யவில்லை. அவர் மீதான புகாரை, எனது தந்தை அப்போதே திரும்ப பெற்றுக் கொண்டார்.
சம்பந்தப்பட்டவர்களே புகார் அளிக்காத போது, வழக்கில் சிறிதும் தொடர்பில்லாத ஒரு நபரால் எப்படி வழக்கு தொடர முடியும். எனவே, எனது வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆசிரியர் மீதான வழக்கை முடித்து உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஜி.இளங் கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அரசு வழக்கறிஞர் வாதிடுகை யில், மாணவியின் தந்தை அளித்த புகாரில் தனது மகளுக்கு மட்டும் பாலியல் தொந்தரவு அளிக்க வில்லை. இதுபோல பல மாணவிகளுக்கும் தொந்தரவு அளித்ததாகத் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் சைல்டு லைன் அமைப்பு, காவல் துறையினர், சமூக நலத்துறை அதிகாரிகள் முழுமையாக விசாரித்த பிறகே, ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆசிரியரிடம் இருந்து செல்போன் மற்றும் பென்ட்ரைவ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் மீது தெரிவிக்கப்பட்ட புகாரில் முகாந்திரம் உள்ளது என்றார்.
இதையடுத்து மாணவியின் கோரிக்கையை ஏற்க மறுத்து, இறுதி விசாரணையை ஜூலை 22-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.