

ராமநாதபுரம் அரசு மருத்துவ மனையில் ஆக்சிஜன் திருட்டு, மருந்துகள் திருட்டில் ஈடுபட்டோர் யாராக இருந்ாதலும் சட்டப் பூர்வமாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் கட்டப்பட்டு வரும் மருத்துவக்கல்லூரி கட்டி டம், மருத்துவமனை, பரமக்குடி அரசு மருத்துவமனை, பார்த்திபனூர், போகலூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவர் ஆய்வு செய்தார். தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவத் துறையினருடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராமநாதபுரம் உட்பட 11 மருத்துவக் கல்லூரிகளில் இந்தாண்டு மாணவர் சேர்க்கை குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் ஒரு வாரத்தில் பேச உள்ளோம். அதன்பிறகு மாணவர் சேர்க்கை நடைபெறும். அப்போது தடுப்பூசி கூடுதலாக வழங்குவது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்குவது குறித்தும் பேசப்படும்.
கடந்த ஆட்சியில் மருத்துவப் பணியாளர்கள் அவுட்சோர்சிங் முறையில் பணியமர்த்தப்பட்டனர். அந்த முறையை ரத்து செய்து, அரசே நேரடியாக பணி நியமனம் செய்யும். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் திருட்டு, மருத்துவர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வராதது, மருந்துகள் திருட்டு உள்ளிட்ட தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், தண்டனையில் இருந்து தப்ப முடியாது. அவர்கள் மீது சட்டப்பூர்வமாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.