

மதுரையைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவர் கராத்தே போட்டியில் தெற்காசிய அளவில் தங்கப் பதக்கம் வென்று சாதித்துள்ளார்.
மதுரை ஆனந்த் நினைவு மெட்ரிக் பள்ளி 6-ம் வகுப்பு மாணவர் ஏ.விவேகன். படிப்பில் சுட்டியான இந்த மாணவர், கடந்த 3 ஆண்டுகளாக கராத்தேயிலும் சாதித்து வருகிறார். பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு 25 பதக்கங்களை வென்றுள்ளார்.
இதுகுறித்து மாணவர் விவேகன் கூறியது: 3-ம் வகுப்பு படித்தபோது கராத்தே மீது திடீர் ஆர்வம் வந்தது. லெஜன்ட்ரி மார்ஷியல் ஆர்ட் பள்ளி பயிற்றுநர் எபினேர் சார்லஸிடம் பயிற்சி பெற்று வருகிறேன். கட்டா என்ற பிரிவில் பிரத்யேகப் பயிற்சி பெறும் நான், முதல் 6 மாதங்களிலேயே உள்ளூர் போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்றேன்.
2014- ல் தேனியில் மண்டல அளவிலும், மாநில அளவிலான பெல்ட் போட்டியிலும், கராத்தேயில் 2 முறை மாநில அளவிலும், சென்னையில் நடைபெற்ற அகில இந்திய போட்டியிலும் பதக்கங்களை வென்றேன். பிப்ரவரி முதல் வாரத்தில் தெற்காசிய அளவில் மும்பையில் நடந்த போட்டியில், 11 முதல் 12 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் 7 நாடுகளைச் சேர்ந்த 2,300 பேர் பங்கேற்றனர். கட்டா பிரிவில் 150 பேர் வரை பங்கேற்றனர். இதில் தங்கப் பதக்கம் வென்றேன்.
ஆகஸ்ட் 13-ம் தேதி மலேசியாவில் நடைபெ்றும் சர்வதேச போட்டியில் சாதிக்க தற்போது தீவிர பயிற்சியெடுத்து வருகிறேன்.
இதற்கிடையில் இலங்கையில் நடைபெறும் போட்டியிலும் பங்கேற்கிறேன். இதுவரை மொத்தம் 25 பதக்கங்கள், கோப்பை, சான்றிதழ்களை பெற்றுள்ளேன். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று, இந்தியாவிற்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே என் லட்சியம். எனது பயிற்றுநர், பெற்றோர் ஆனந்த், ஜெயந்தி ஆகியோரது ஊக்கமே எனது வெற்றிக்கு முக்கிய காரணம் என்றார்.