Published : 10 Jul 2021 03:15 AM
Last Updated : 10 Jul 2021 03:15 AM

சாக்பீஸ், அரிசி, முட்டை ஓடு, பனை ஓலையில் 500-க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள்: கைவண்ணத்தில் கலக்கும் கட்டிடப் பொறியாளர்

திருநெல்வேலியை சேர்ந்த கட்டிடப் பொறியாளர் முப்பிடாதி (42) தனது கைவேலைப்பாடுகளால் 500-க்கும் மேற்பட்ட கலைப்பொருட்களை உருவாக்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார்.

திருநெல்வேலி டவுன் பெருமாள் தெற்கு ரதவீதியை சேர்ந்தமுப்பிடாதி தனது இளமை பருவத்தில் இருந்தே பல்வேறு விதமான கலை படைப்புகளை உருவாக்கி வருகிறார். பாவூர்சத்திரம் எம்எஸ்பி பாலிடெக்னிக்கில் சிவில்படிக்கும்போதே சாக்பீஸ் துண்டுகளில் பல்வேறு வகையான உருவங்களை படைத்து சகமாணவர்களையும், ஆசிரியர்களையும் பிரமிக்க வைத்திருந்தார்.

ஒரு சாக்பீஸ் துண்டை இவரிடம் கொடுத்தால் ஒரு சிறிய ஆணி மூலம் நாம் கேட்கும் உருவங்களை 20 நிமிடங்களுக்குள் உருவாக்கி கொடுக்கிறார். தற்போது இவரிடம் 20 வகையான பொருட்களால் உருவாக்கப்பட்ட 55-க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் உள்ளன.

சாக்பீஸ் மட்டுமின்றி சோப்பு, மெழுகு, பென்சில் முனை, முட்டைஓடுகள், ஸ்டேபிளர் பின், தெர்மாகோல், தென்னை ஓலை, மாவிலை, ஸ்ட்ரா, வேர்க்கடலை தோடுகள், சணல், பல்குத்தும் குச்சிகள், ஐஸ்கிரீம் குச்சிகள் என்றுவெவ்வேறு விதமான பொருட்களால் கலைப்பொருட்களை உருவாக்கி வைத்திருக்கிறார்.

பனை ஓலையில் 1,330 திருக்குறளை தலைகீழாக எழுதி வைத்திருக்கிறார். கண்ணாடி உதவியுடன் இவற்றை படிக்கலாம். அரிசியில் சிவலிங்கம், மாலைகள், ஈபிள் கோபுரம், பேனாக்கள், விநாயகர், சரஸ்வதி, வெங்கடாஜலபதி உள்ளிட்ட தெய்வ உருவங்களையும் , அமெரிக்க சுதந்திரதேவி, காந்தியடிகள் மற்றும் பல்வேறு வகையான விலங்கினங்கள் மற்றும் தாஜ்மகால் உள்ளிட்ட நினைவு சின்னங்களையும் உருவாக்கியிருக்கிறார்.

இவரை பாராட்டி கலைவளர்மணி விருதை 2007-ம் ஆண்டில் அப்போதைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் பிரகாஷ் வழங்கினார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோரை நேரில்சந்தித்து தனது கலைப்படைப்புகளை காண்பித்து வாழ்த்து பெற்றுள்ளார். பேனா முழுக்க அரிசியை ஒட்டி அதை கருணாநிதிக்கு நினைவுப் பரிசாகவும் அளித்திருக்கிறார்.

தற்போது கரோனா ஊரடங்கின்போது முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தமாக வைத்திருப்பது உள்ளிட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பொருட்களால் சிறிய பொம்மைகளை உருவாக்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘‘சிறுவயது முதல் ஓவியம் வரைதல் உள்ளிட்டவற்றை பொழுதுபோக்காக செய்து வந்தேன். பின்னர் பல்வேறு பொருட்களால் கலைப் பொருட்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டினேன். இதை யாரும் எனக்கு கற்றுத்தரவில்லை. நானாகவே கற்றுக்கொண்டேன். எனது தாயார் ஆவுடையம்மாள் ரங்கோலி கோலம் வரைவதை பார்த்து எனக்கு கலைத்துறையில் ஆர்வம் வந்தது.தற்போது கட்டிடப் பொறியாளராக பணிபுரிந்து வரும் நிலையில், இரவுநேரத்திலும், விடுமுறையிலும் நேரம் ஒதுக்கி கலைப்பொருட்களை உருவாக்கி வருகிறேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x