

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் ரூ.3.22 கோடி மதிப்பில் கட்டப்பட்டு திறக்கப்படாமலேயே உள்ள பேருந்து நிலைய கட்டிடம் சேதமடைந்து வருவதால், அதை வேறு பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் கடந்த 2014-ம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் ரூ.3.22 கோடியில் 13 கடைகளுடன்கூடிய வணிக வளாகம், கழிப்பறைகள், அலுவலகம், தாய்மார்கள் பாலூட்டும் தனியறை போன்ற வசதிகளுடன் பேருந்து நிலையம் கட்டப்பட்டது.
ஆனால், மயானப்பகுதி, நீர்ப்பிடிப்பு பகுதியாக இருப்பதால் அந்த இடத்தில் பேருந்து நிலையம் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து, அந்தப் பேருந்து நிலையம் திறக்கப்படவில்லை.
இந்தக் கட்டிடம் ஆண்டுக்கணக்கில் பயன்பாடு இல்லாமல் இருந்து வருவதால், அங்கு புதர் மண்டியுள்ளது. மதுஅருந்துவோர், அங்கேயே பாட்டில்களையும் உடைத்துபோட்டு செல்கின்றனர். மேலும், பேருந்து நிலையத்தில் இருந்து தகர ஷீட்டுகள், பைப்புகள், இரும்பு கதவுகள், ஜன்னல்கள் அனைத்தும் உடைத்து திருடப்பட்டுள்ளன.
மீண்டும் இதை பேருந்து நிலையமாக செயல்படுத்த முடியாத சூழல் உள்ளதால் இந்த கட்டிடத்தை வேறு பயன்பாட்டுக்கு கொண்டுவருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கந்தர்வக்கோட்டை தொகுதி எம்எல்ஏ எம்.சின்னதுரையிடம் கேட்டபோது, அவர் கூறியது:
பேருந்து நிலையத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. ஆகையால், இந்த இடத்தை மக்களின் அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு வேறு துறையின் கீழ் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். அதுகுறித்து அலுவலர்களிடம் ஆலோசிக்கப்படும் என்றார்.