

திருநெல்வேலி மாவட்டத்தில் பாசனத்துக்காக அணைகளில் இருந்து பெருமளவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அதையொட்டிய கால்வரத்து குளங்கள் நிரம்பி வருவதால் மானாவாரி குளங்களுக்கு பறவைகள் இடம்பெயர்ந்துள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் 1,221 கால்வரத்து குளங்கள், 1,297 மானாவாரி குளங்கள் என மொத்தம் 2,518 குளங்கள் உள்ளன. பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய பிரதான அணைகளில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கார் சாகுபடிக்கு பெருமளவுக்கு தண்ணீர் கால்வாய்களில் திறக்கப்பட்டுள்ளது.
இந்த கால்வாய்கள் மூலம் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான கால்வரத்து குளங்களும் நிரம்பி வருகின்றன. இக்குளங்களில் ஓரளவுக்கு தண்ணீர் இருந்த போது அதைச் சுற்றியுள்ள மரங்களில் கூடு கட்டியிருந்த பறவைகள், அதிக தண்ணீர் வரத்து காரணமாக இரைதேடி மானாவாரி குளங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக பறவை ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.
அந்த வகையில் திருநெல்வேலி மாநகரின் விரிவாக்கப் பகுதிகளில் உள்ள மானாவாரி குளங்களில் தற்போது சங்குவளை நாரைகள் அதிகளவில் முகாமிட்டுள்ளன.
சுருங்கும் குளங்கள்
வி.எம். சத்திரம் பகுதியைச் சுற்றிலும் பல மானாவாரி குளங்கள் உள்ளன. இக்குளங்களில் பல பறவைகள் இரைதேடி தற்போது அதிக அளவில் வருகின்றன. இந்த குளங்கள் பெரும்பாலும் ஆக்கிரமிப்புகளால் சுருங்கி வருகின்றன. திருச்செந்தூர் சாலை அகலப்படுத்தப்படும் பணி நடைபெறும் நிலையில் இதற்காக குளத்தின் சில பகுதிகள் பயன்படுத்தப்படவும் வாய்ப்புகள் உள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றி குளங்களை தூர்வாரி மழைக் காலங்களில் தண்ணீரை சேமித்து வைத்தால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். அத்துடன் விவசாயப் பணிகளும் இப்பகுதிகளில் நடைபெறும். மேலும் ஏராளமான பறவைகளின் புகலிடமாகவும் இக்குளங்கள் திகழும் என்று இப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
பறவைகள் ஆராய்ச்சியாளர் மதிவாணன் கூறும்போது, ‘‘திருநெல்வேலி மாவட்டத்தில் கூந்தன்குளம் பறவைகள் சரணா லயம், திருக்குறுங்குடி பறவைகள் காப்பகம் பகுதிகளில் கடந்த ஜனவரி மாத இறுதியில் சங்குவளை நாரைகள் பெருமளவில் கூடுகள் கட்டி முட்டையிட்டிருந்தன. முட்டைகள் பொரித்து குஞ்சுகள் வெளியாகி, தற்போது அவை இளம்பறவைகளாக பல்வேறு நீர்நிலைகளுக்கும் சென்று கொண் டிருக்கின்றன. ஏறக்குறைய 90% குஞ்சுகள் பொரிக்கப்பட்டு விட்டன.
இடம் பெயரும் பறவைகள்
குளங்களில் கால் பங்கு அல்லது பாதியளவுக்கு தண் ணீர் இருக்கும்போது கரைகள் சகதியுடன் காணப்படும். அப்போது பறவை களுக்கு அதிகளவில் புழு, பூச்சிகள், மீன்கள் இரையாக கிடைக்கும். இதனால்தான் இத்தகைய குளங்களிலும், அதையொட்டிய விளைநிலங்களிலும் அதிகளவில் பறவைகள் காணப்படும்.
தற்போது மாவட்டத்தில் விவசாயத்துக்காக கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு குளங்கள் பெருகிவருவதால், கால்வரத்து குளங்கள் அமைந் துள்ள பகுதிகளில் இருந்து மானாவாரி குளங்களை நோக்கி பறவைகள் இடம்பெயர்கின்றன. அங்கு அவற்றுக்கான இரை கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே, இக்குளங்களில் தற்போது பறவைகள் அதிகம் காணப்படுகின்றன’’ என்றார்.