

பிரான்ஸ் நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணிடம் பண மோசடியில் ஈடுப்பட்ட நைஜீரிய வாலிபரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாஸ்லின் மேரி. இவர் சென்னை விமான நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவரது தொலைபேசிக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் தன்னை பிரெஞ்சு நாட்டு தூதரக அதிகாரி என்று அறிமுகபடுத்திக் கொண்டு , தாங்கள் புதுச்சேரியை சார்ந்தவர் என்பதால் பிரான்ஸ் விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருகிறேன் என்று தெரிவித்தார்.
அதற்காக அந்த நபரின் வங்கி கணக்கில் 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனை நம்பிய ஜாஸ்லின் மேரி அந்த போலி தூதரக அதிகாரியின் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தி உள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட அந்த நபர் வேலை வாங்கித் தராமல் தனது செல்போனை அனைத்து வைத்துவிட்டு மாயமானார்.
நடந்தவை குறித்து ஜாஸ்லின் மேரி புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அந்த நபரின் தொலைபேசி எண் மற்றும் வங்கி கணக்கை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் ஜாஸ்லின் மேரியை ஏமாற்றியது நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது.
பெங்களுரில் பதுங்கி இருந்த டைவோ அத்வேலேவை (TaiwoAdewale) கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர். வருகின்ற திங்கட்கிழமை அன்று டைவோ அத்வேலே போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைபர் க்ரைம் போலீஸார் திட்டமிட்டுள்ளதாகவும், அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்த பிறகே அவர் மோசடி செய்த பணம் குறித்தும், இதே போல் அவர் வேறு யாரிடமாவது பண மோசடியில் ஈடுப்பட்டுள்ளாரா என்பது தெரியவரும் என சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.