ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் ஓட்டுநர் உரிமம் பெறும் விதிமுறையை ரத்து செய்யக்கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் ஓட்டுநர் உரிமம் பெறும் விதிமுறையை ரத்து செய்யக்கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
Updated on
1 min read

அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்றால், வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லாமல் உரிமம் பெறலாம் என்ற விதி திருத்தத்துக்கு ரத்து செய்யக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ஜான்மார்டின், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

மோட்டார் வாகன திருத்தச் சட்டம் 2019ன் 8ம் பிரிவில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளின் அங்கீகார விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது.

இந்தத் திருத்தங்கள் கடந்த (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்துள்ளன. இத்திருத்தத்தின் படி அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் ஓட்டுநர் பயிற்சி பெற்றவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற வட்டார போக்குவரத்து அலுவலர் முன்பு வாகனங்களை ஓட்டிக்காட்ட வேண்டியதில்லை. பயிற்சி முடிந்ததும் உரிமம் வழங்கப்படும்.

மோட்டார் வாகன சட்டத் திருத்தப்படி, அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் 2 ஏக்கர் பரப்பில் அமைந்திருக்க வேண்டும், வாகனம் ஓட்டுவதற்கான பயிற்சி பெற போதிய கட்டமைப்பு வசதிகளை பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். நகர்ப் பகுதியில் 2 ஏக்கர் நிலம் கிடைப்பது எளிதல்ல.

மத்திய அரசின் சட்டத் திருத்தத்தால் இந்தியா முழுவதும் பல ஆண்டுகளாக இயங்கி வரும் 4187, தமிழகத்தில் 1650 ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் பாதிக்கப்படும். எனவே, ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி அங்கீகாரம் தொடர்பான மத்திய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in