Published : 09 Jul 2021 06:33 PM
Last Updated : 09 Jul 2021 06:33 PM

3 மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக 3 மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் முனைவர் நா.புவியரசன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

’’வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக இன்று (ஜூலை 9) நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 10, 11-ம் தேதிகள்

நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

ஈரோடு, திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 10 முதல் 12 வரை நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் மலைப் பகுதிகளில் மண் சரிவு ஏற்படக் கூடும். இதனால் பொதுமக்கள் மலை ஏற்றத்தைத் தவிர்க்க வேண்டும்.

சென்னை நிலவரம்

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வங்கக் கடல் பகுதிகள்

ஜூலை 9 - 12ஆம் தேதி வரை

குமரிக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூலை 10- 12ஆம் தேதி வரை

மத்திய மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகள், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள் மற்றும் ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அரபிக் கடல் பகுதிகள்

ஜூலை 9 முதல் 11ஆம் தேதி வரை

கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள், மாலத்தீவு மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூலை 9 முதல் 13ஆம் தேதி வரை

தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திதிலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்''.

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x