

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக குறிஞ்சி என்.சிவகுமார் பொறுப்பேற்றார்.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூலை 09) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் 04.10.2007 அன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தமிழகத்தில் உள்ள கேபிள் டிவி ஆப்ரேட்டர்களின் வாழ்வாதாரத்துக்காகவும், நிறைந்த சேவையைக் குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காகவும் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிறுவனம் அரசின் பல்வேறு சேவைகளை எளிய முறையில் பொதுமக்கள் பெற்றிட அரசு இ-சேவை மையங்களை நிறுவி அதன் மூலம் இணைய சேவைகளையும் வழங்கி வருகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் 12.03.2021 முதல் காலியாக உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு குறிஞ்சி என்.சிவகுமாரை நியமித்து 06.07.2021 அன்று ஆணையிட்டார்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள குறிஞ்சி என். சிவகுமார், முதல்வர் மு.க.ஸ்டாலினையும், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அதனைத் தொடர்ந்து, சென்னை எழும்பூரில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக குறிஞ்சி என்.சிவகுமார் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார்".
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.