Published : 09 Jul 2021 04:24 PM
Last Updated : 09 Jul 2021 04:24 PM

69% இட ஒதுக்கீடு வழக்கு; மூத்த வழக்கறிஞர்களை நியமித்துப் பாதுகாத்திட நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின்

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் கல்வி, பொருளாதார மேம்பாட்டுப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என, அதிகாரிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூலை 09) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான கல்வி, பொருளாதார மேம்பாட்டுப் பணிகளைத் தொய்வின்றி விரைந்து மேற்கொள்ள முதல்வர், அலுவலர்களை அறிவுறுத்தினார்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்களை எவ்விதத் தாமதமுமின்றி செயல்படுத்த வேண்டும் என்றும், துறையின்கீழ் நடத்தப்படும் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ / மாணவியர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும், தரமான உணவு வழங்கவும் அறிவுறுத்தினார்.

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை மேம்படுத்தி சிறப்பான கல்விப் பயிற்சி அளித்து மாணவ / மாணவியர்கள் மேற்படிப்புகளில் அதிக அளவில் சேரும் வகையில் செயல்பட வேண்டும் என்றும், கல்வி உதவித்தொகையினைத் தேவைப்படும் மாணவ / மாணவியர் அனைவருக்கும் உரிய நேரத்தில் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும், மிதிவண்டிகளைக் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே வழங்கிட வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டார்.

69 சதவீத இட ஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரணைக்கு வரும்போது மூத்த வழக்கறிஞர்களை நியமித்து 69 சதவீத இட ஒதுக்கீட்டினைப் பாதுகாத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் அறிவுறுத்தினார்.

சலவைப் பெட்டிகள், தையல் இயந்திரங்கள் ஆகியவற்றைத் தாமதமின்றி தேவைப்படும் பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்றும், மாறிவரும் சூழலில் அவர்களுக்கு மாற்றுத் தொழில்களுக்கு உதவிடும் வகையில் திட்டங்களை வகுத்திட அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு நரிக்குறவர் நலவாரியம், சீர்மரபினர் நல வாரியம், உலமா மற்றும் இதரப் பணியாளர்கள் நலவாரியங்கள் வாயிலாகப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சீரிய முறையில் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டார்.

நாடோடி வாழ்க்கை முறையில் இருக்கும் நரிக்குறவர் சமுதாய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட அவர்களுக்கு வாழிடங்களை (separate habitation) அடிப்படை வசதிகளுடன் உருவாக்கிட வேண்டும் என்றும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தி அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மாவட்டங்களில் செயல்படும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கங்கள் மூலம் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு உரிய முறையில் சென்றடைவதை உறுதி செய்திடவும், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் புனரமைக்கும் திட்டங்களின் கீழ், புனரமைப்புப் பணிகளைச் செவ்வனே மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின்கீழ், பதிவு செய்யப்படாத வக்ஃப் வாரியங்களைப் பதிவு செய்திட உரிய நடவடிக்கை எடுக்கவும், ஆக்கிரமிப்பில் உள்ள வக்ஃப் சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுத்திடவும், வக்ஃப் நிறுவனச் சொத்து ஆவணங்களைக் கணினி மயமாக்கிடவும், வக்ஃப் வாரிய பணிகள் மற்றும் சேவைகளை இ-சேவையாக மாற்றிடவும் அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை அளித்து, அவர்கள் எவ்விதத் தடங்களும் இன்றிப் பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புனிதப் பயணிகளுக்கு வழங்கப்படும் நிதி உதவியினை உரிய காலத்தில் முறையாக வழங்கிட வேண்டும் என்றும், இதேபோல ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கு நிதி உதவிகளை உரிய காலத்தில் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் மூலம் அதிகமான நபர்களுக்கு உரிய காலத்திற்குள் கடன் வழங்கிட வேண்டும் என்றும் இந்நிறுவனங்கள் மூலம் கல்விக் கடன் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

சிறுபான்மையினருக்கான சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளான அனைத்துச் சிறுபான்மையினருக்கும் கல்வி உதவித்தொகை வழங்குதல், சிறுபான்மையின இளைஞர்களுக்குத் திறன் வளர்ப்புப் பயிற்சி, தொழில் முனைவோருக்குச் சிறப்புப் பயிற்சி, தொழில் தொடங்க கடன் உள்ளிட்ட பரிந்துரைகளைச் செயல்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் முதல்வர் அறிவுறுத்தினார்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x