Published : 09 Jul 2021 04:06 PM
Last Updated : 09 Jul 2021 04:06 PM

21 சிறந்த எழுத்தாளர்களுக்குப் பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ்கள்: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 21 சிறந்த எழுத்தாளர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூலை 09) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுப் பணிக்கான தனிப் பணிக்குழு நிதியான (CORPUS FUND) 50 லட்சம் ரூபாயிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையினைக் கொண்டு ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்தவர்களின் சிறந்த 10 படைப்புகள் மற்றும் ஆதிதிராவிடர் அல்லாதோர் ஒருவரின் சிறந்த படைப்பையும் சேர்த்து, மொத்தம் 11 படைப்புகளைத் தேர்வு செய்து, அப்படைப்புகளுக்குப் பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தின் மூலம் 2018-2019ஆம் ஆண்டிற்கான சிறந்த படைப்புகளுக்காகத் தேர்வு செய்யப்பட் ந.அறிவரசன் (கபிலரின் செயற்கையற்ற வாழ்வும் மொழி நடையும்), எஸ். வசந்தா (திருக்குறளில் பௌத்தம்), எம்.பிரேம்குமார் (மாமன்னர் அசோகர்), சு.அ.அன்னையப்பன் (தொண்டை மண்டலப் பண்பாட்டில் திரௌபதியம்மன்), சு.சுகிர்தராஜா (வஞ்சிக்கப்பட்டவனின் வாய்க்கரிசி), இரா.கலாராணி (பௌத்த தியானம்), டி.மோனிகா, (பேரறிஞர் அம்பேத்கர்), மு.ரமேஷ் (சங்க இலக்கியத்தில் நிலங்கள், குடிகள், வழிபாடுகள்), கே.பரமேஸ்வரி (தடை அதை உடை புதிய சரித்திரம் படை - உளவியல் கட்டுரை), அன்பாதவன் (இப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் குதிரை), ம. இளங்கோவன் (தமிழரின் பண்பாட்டுப் பதிவுகள்) ஆகியோருக்கு இன்று தலைமைச் செயலகத்தில் முதல் தவணைத் தொகையாகத் தலா இருபதாயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

2019-2020ஆம் ஆண்டுக்கான சிறந்த படைப்புகளுக்காகத் தேர்வுசெய்யப்பட்ட அ.கருப்பையன் (தடையும் ஒரு நாள் உடையும்), ச.சண்முகசுந்தரம் (குப்பத்து ராஜாக்கள்), க.மோகன் (உயிர்த்தாள் உயிர் நீங்கினாள்), எ.பாரதிராஜா (வெற்றி முழக்கங்கள்), செ.காளிமுத்து (தமிழ் இலக்கியங்களில் மருத்துவம்), அன்டனூர் சுரா (எத்திசை செலினும்), மீனாசுந்தர் என்கிற மா.மீனாட்சி சுந்தரம் (படைப்பு வெளியில் பதியும் பார்வைகள்), ஆர்.கமலம் சின்னசாமி (நலம் தரும் நாட்டு வைத்தியம்), ம.ராஜா (உலக மயமாக்கல் சூழலில் நாட்டுப்புறக் கலைகள் - ஓர் பன்முகப் பார்வை - கட்டுரைத் தொகுப்பு), மு.வெ.ஆடலரசு (இசை மொழியும், ஆதி இனமும்) ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் தவணைத் தொகையாகத் தலா இருபதாயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x