லியோனி நியமனம்; தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் நோக்கத்தைச் சிதைப்பதாக உள்ளது: ஓபிஎஸ்

ஓபிஎஸ் - ஐ.லியோனி: கோப்புப்படம்
ஓபிஎஸ் - ஐ.லியோனி: கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் லியோனியை நியமித்து இருப்பதும், அந்தக் கழகத்தின் நோக்கத்தையே சிதைப்பதாக அமைத்துள்ளது என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி சமீபத்தில் நியமிக்கப்பட்டார். தொண்டாமுத்தூரில் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது லியோனி பெண்கள் குறித்துப் பேசியது சர்ச்சையான நிலையில், பாடநூல் கழகத்தின் தலைவராக அவர் நியமனம் செய்யப்பட்டது சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகியது. பாமக நிறுவனர் ராமதாஸ் உட்பட்டோரும் இந்த நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் விளக்கமளித்த ஐ.லியோனி, "இத்தகைய விமர்சனங்களை நான் பொருட்படுத்தவில்லை. ஏனெனில், பெண்களே அதுகுறித்த பெரிய போராட்டத்தையோ, பெரிய அளவிலான எதிர்ப்பையோ இதுவரை பதிவு செய்யவில்லை" என்றார்.

இந்நிலையில், ஐ.லியோனி நியமனத்துக்கு ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் இன்று (ஜூலை 09) வெளியிட்ட அறிக்கையில், "தமிழக மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வகையில், வரலாறு, அரசியல், பொது அறிவு, சமூகவியல், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பாடப்புத்தகங்களில் தரமான பாடங்களை வடிவமைக்கின்ற, தமிழர் பண்பாடு மற்றும் நாகரிகத்தை எடுத்துரைக்கின்ற பணியை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் லியோனியை நியமித்து இருப்பது இந்தக் கழகத்தின் நோக்கத்தையே சிதைப்பதாக அமைந்துள்ளது. இதன்மூலம், இந்தக் கழகத்தின் தரம் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உருவாகும்.

பட்டிமன்றம் என்ற போர்வையில், பெண்களை இழிவாகப் பேசுவதையும், அரசியல் கட்சித் தலைவர்களை நாகூசும் வகையில் வசைபாடுவதையும், நாகரிகமற்ற கருத்துகளை மக்கள் மனங்களில், குறிப்பாக இளைய சமுதாயத்தினர் மனங்களில் விதைக்க முயற்சி செய்வதையும் வாடிக்கையாகக் கொண்டவர் லியோனி.

நகைச்சுவை என்ற பெயரில் அரசியல் கட்சித் தலைவர்களை அருவருப்பான முறையில் விமர்சிக்கக்கூடியவர் லியோனி. இவரை இந்தப் பதவியில் நியமிப்பதன் மூலம் தவறான கருத்துகள் மாணவ, மாணவிகளிடம் எடுத்துச் சொல்லப்படுவதோடு, அவர்களின் எதிர்காலம் வெகுவாக பாதிக்கப்படும்.

எனவே, தமிழகத்தின் எதிர்காலத் தூண்களாகிய மாணவ, மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, நல்ல கருத்துகள் மாணவ, மாணவிகளைச் சென்றடைய வேண்டும் என்பதன் அடிப்படையில், இந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும், பெண்களை மதிக்கின்ற ஒருவரைத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்" என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in