கட்டண நிலுவையால் ஆன்லைன் வகுப்பில் சேர்க்க மறுப்பா?- அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கட்டண நிலுவையால் ஆன்லைன் வகுப்பில் சேர்க்க மறுப்பா?- அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

கடந்த ஆண்டு பள்ளிக் கட்டண நிலுவைத் தொகையைச் செலுத்தாத மாணவர்களை ஆன்லைன் வகுப்பில் சேர்த்துக்கொள்ள மறுப்பதாக எழும் புகார் குறித்து பதிலளிக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை, ராயப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், “நடப்பு 2021-22ஆம் கல்வியாண்டுக்கான ஆன்லைன் வகுப்பில் மாணவர்கள் கலந்துகொள்ள, கடந்த ஆண்டு கட்டண பாக்கியைச் செலுத்தும்படி தனியார் பள்ளிகள் பெற்றோரை வற்புறுத்துகின்றன.

கட்டண பாக்கியைச் செலுத்தும்படி நிர்பந்திக்காமல், மாணவர்களை அடுத்த வகுப்புக்கு முன்னேற்றுவது மட்டுமல்லாமல், அவர்களுக்கு 2021-22ஆம் கல்வியாண்டுக்கான புத்தகங்களை வழங்கி, ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும்.

கட்டண பாக்கியைத் தள்ளுபடி செய்து, ஆன்லைன் வகுப்புகளைத் திறமையான முறையில் நடத்த மாற்று நடைமுறைகளைக் கண்டறிய கல்வித்துறை நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைப்பதுடன், குறைந்தபட்சக் கட்டணத்தை நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவுப்படி கடந்த ஆண்டு 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும், பள்ளிகளுக்குக் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கக் குழு அமைத்து அது செயல்பட்டு வருவதாகவும் விளக்கம் அளித்தார்.

இதையடுத்து, வழக்குத் தொடர்பாக மூன்று வாரங்களுக்குள் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in