

காஞ்சிபுரம், நீலகிரி, தேனி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உள் தமிழகம் முதல் மன்னார் வளைகுடா வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக 9-ம் தேதி, நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய 12மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யும்.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைவதால் 10 முதல் 12-ம் தேதி வரைநீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கன முதல் மிகக் கனமழையும், இதர மேற்குத் தொடர்ச்சி மலையைஒட்டிய திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் ஈரோடு, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக் கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.