

நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தமிழக அரசு உயர்மட்டக்குழு அமைத்து இருப்பது, மாநில அரசின் அதிகார வரம்பை மீறிய செயல் என மத்திய அரசு, உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வினால் ஏழை, எளிய மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆராய்ந்து, அதற்கான மாற்றுவழி குறித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் அடங்கிய உயர்மட்டக்குழுவை அமைத்து தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டுள்ளது.
இதை எதிர்த்து பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தவழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு, இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில்அளிக்க உத்தரவிட்டு இருந்தது.
இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில்மனுவில், ‘‘மாநிலஅரசின் அதிகாரத்திலும், அரசியல்சாசன அடிப்படை பணிகளிலும் மனுதாரர் தலையிட முடியாது என்றும், உயர் மட்டக் குழுவை எதிர்த்து தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை ஜனநாயகத்தை ஒடுக்கும் முயற்சியாகவே கருத வேண்டும்’’ எனவும் தெரிவித்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை சார்பு செயலாளர் எல்.சந்தன்குமார் பதில் மனு தாக்கல் செய்துள்ள்ளார்.
அதில், ‘‘நீட் தேர்வுக்கு மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு உச்சநீதிமன்றத்தால் சட்ட அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நீட்தேர்வு நடத்தப்பட்டு மெரிட் அடிப்படையில் பொது கலந்தாய்வு மூலமாக மருத்துவ கல்விக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
அகில இந்திய ஒதுக்கீட்டில் 15 சதவீத இடங்களை மத்திய அரசும், எஞ்சிய 85 சதவீத இடங்களை மாநில அரசும் நிரப்பி வருகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாமல் காலியாக உள்ள இடங்கள் மாநில அரசுகள் வசமே திருப்பி ஒப்படைக்கப்படுகிறது. ஆனால் நீட்தேர்வு பாதிப்பு குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தமிழக அரசு குழு அமைத்து இருப்பது, மாநில அரசின் அதிகார வரம்பை மீறிய செயல். இவ்வாறுநீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வுசெய்ய தமிழக அரசு தன்னிச்சையாக குழு அமைக்க முடியாது.
மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு தொடர்பான சட்டமும், விதிகளும், அரசியல் சாசன அடிப்படை உரிமைகளை பறிப்பதாக கூற முடியாது. மருத்துவக்கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்றும், பொதுநலனைக் கருத்தில் கொண்டுமே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது. இந்த நியமனம் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது. மாநில அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டுமே பிரத்யேக ஆணையம் அமைக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் நீட் தேர்வுபாதிப்பு குறித்து ஆராயும் வகையில் குழு அமைக்க தமிழக அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் 13 -ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.