அரசுப் பணிகளில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

அரசுப் பணிகளில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
Updated on
1 min read

அரசுப் பணிகளில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பின்னடைவு பணியிடங்களை விரைவாக நிரப்புவதுடன், மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை உரிய காலத்தில் வழங்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் கல்வி, சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், அடுத்த 10 ஆண்டுகளுக்கான ஆதிதிராவிடர் நலத் துறையின் தொலைநோக்கு திட்டங்கள் குறித்தும் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு நடத்தினார்.

இக்கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது:

பல்வேறு அரசுத் துறைகளில்ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்களை கண்டறிந்து, அவற்றை விரைவாக நிரப்ப வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை, உயர்கல்வி சிறப்பு உதவித்தொகை, முனைவர் படிப்புக்கான ஊக்கத்தொகை ஆகிய திட்டங்களை எவ்வித தொய்வும் இல்லாமல் உரியகாலத்தில் வழங்க நடவடிக்கைஎடுக்க வேண்டும். வெளிநாடுகளுக்குச் சென்று முதுகலை, ஆராய்ச்சிப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தை சீரமைக்க உரிய நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும்.

வீடற்ற ஆதிதிராவிடர்களுக்கான இலவச வீட்டுமனைப் பட்டா திட்டத்தின் கீழ், விண்ணப்பங்கள் பெறப்பட்டு நிலுவையில் உள்ள பயனாளிகளுக்கு உடனடியாக வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். ஆதிதிராவிடர் துணைத் திட்டம் மற்றும் பழங்குடியினர் துணைத்திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன் உரிய பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டம் உரிய முறையில் அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க வேண்டும். வழக்குகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் குடியிருப்புகளில் கூடுதல் வசதிகள் தேவைப்படும் இடங்களை கண்டறிந்து அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்துதர வேண்டும். ஆதிதிராவிடர் அல்லாத பிற இனத்தவரிடம் பஞ்சமி நிலங்கள் இருப்பதை கண்டறிந்து அவற்றை மீட்டு ஆதிதிராவிடர்களிடமே ஒப்படைக்க வேண்டும். துரித மின் இணைப்பு திட்டத்துக்கான வைப்புத் தொகையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை செயலர் க.மணிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in