

திருவையாறு பகுதியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், 5 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் 100 ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்பகுதியில் நேற்று மாலையில் இருந்து இரவு முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதில் திருவையாறு, நடுப்படுகை, திருப்பூந்துருத்தி ஆகிய பகுதிகளில் 30 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குலை தள்ளிய வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.
இதுகுறித்து நடுப்படுகை வாழை விவசாயி பாஸ்கரன் கூறியதாவது: எங்கள் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால், 5 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. இதனால், வாழை விவசாயிகளுக்கு ரூ.20 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட நஷ்டத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில், தற்போது வாழை மரங்கள் முறிந்து விழுந்தும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, இப்பகுதியில் வாழை சேதத்தை வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.