

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் வரும் அக்டோபரில் முடிவடையவுள்ளதால் அப்பதவியை பெறப்போவது ஆளும் கட்சிக் கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸா, பாஜகவா, அதிமுகவா என்ற அடுத்த அரசியல் நகர்வு தொடங்கியுள்ளது.
புதுச்சேரியில் கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - அதிமுக ஆகியவை கூட்டணி அமைத்தன. தேர்தல் முடிவில் என்.ஆர்.காங்கிரஸ் 15 தொகுதிகளிலும் அதிமுக 5 தொகுதிகளிலும் வென்றன. அப்போது அதிமுகவைச் சேர்க்காமல் சுயேச்சை எம்எல்ஏ விஎம்சி சிவக்குமார் ஆதரவுடன் ரங்கசாமி ஆட்சியமைத்து முதல்வரானார்.
இதைத் தொடர்ந்து வந்த மக்களவைத் தே்ரதலில் ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் வென்றது. அப்போது வந்த மாநிலங்களவைத் தேர்தலில் தனது நண்பர் கோகுலகிருஷ்ணனை எம்பியாக்க ரங்கசாமி விரும்பினார், கட்சி எம்எல்ஏக்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதால், யாரும் எதிர்பார்க்காத வகையில் என்.ஆர்.காங்கிரஸைச் சேர்ந்ததனது நண்பர் கோகுலகிருஷ்ணனை அதிமுக உறுப்பினராக்கி, புதுச்சேரி மாநிலங்களவை எம்பிஆக்கினார் ரங்கசாமி.
தற்போது அதிமுக எம்பியாக உள்ள ரங்கசாமியின் நண்பர் கோகுலகிருஷ்ணனின் பதவிகாலம் வரும் அக்டோபரில் முடிவடைய உள்ளது. தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங். - பாஜ க - அதிமுக ஆகியவை கூட்டணி அமைத்து வெற்றிபெற்றுள்ளன. அமைச்சர்கள் பதவி பங்கீடு முடிந்துபொறுப்பேற்றும், அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீட்டில் காலதாமதம் நிலவுகிறது.
தற்போது மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் தமிழக பாஜக தலைவர் முருகன், மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். அதேநேரத்தில், முருகன் எம்பியாக இல்லை. அதனால் 6 மாதங்களுக்குள் அவர் எம்பியாக வேண்டும். அதனால் புதுச்சேரியில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக முருகன் தேர்வு செய்யப்படுவார் என்ற பேச்சு எழுந்துள்ளது. புதுச்சேரியில் பேரவைத்தலைவர் பதவியேற்பு, அமைச்சர் பதவியேற்பு என அனைத்து நிகழ்வுகளிலும் முருகன் பங்கேற்றதையும் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதுபற்றி பாஜக தரப்பில் விசாரித்தபோது, “எம்.பி.வேட்பாளர் பற்றி கட்சி மேலிடம்தான் முடிவு எடுக்கும். முக்கியமுடிவுகளை முதல்வர் ரங்கசாமியிடம் நேரடியாகத்தான் பேசுவார்கள்” என்று குறிப்பிடுகின்றனர்.
இதுபற்றி என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் விசாரித்தபோது, “புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் அரசில் அமைச்சராக இருந்து, என்.ஆர்.காங்கிரஸில் இணைந்த மல்லாடி கிருஷ்ணாராவ் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கோரியிருந்தார். அதனால்தான் மல்லாடி கிருஷ்ணாராவ் ஏனாமில் இம்முறை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. அவரை முன்னிறுத்த ரங்கசாமி திட்டமிட்டுள்ளார்.
கடந்த முறை தான் திட்டமிட்டபடி, தனது நண்பர் கோகுலகிருஷ்ணனை அதிமுகவில் சேர்த்துமாநிலங்களவை எம்பியாகமுதல்வர் ரங்கசாமி மாற்றினார். அதுபோல் ஏதேனும் நெருக்கடிஏற்பட்டால் மல்லாடி கிருஷ்ணாராவை பாஜகவில் இணைத்து எம்பியாக்கவும் வாய்ப்புள்ளது.
உத்தரபிரதேசம் உட்பட பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து முருகன் எளிதாக எம்.பி.யாகலாம். புதுச்சேரியில் இருப்பது ஒரு மாநிலங்களவை எம்பி பதவிதான். வெளிமாநிலத்தவரை எம்பியாக்க இங்குள்ளோர் விரும்பமாட்டார்கள். அவ்வாறு முயற்சி எடுத்தால் ஆளும்கட்சி கூட்டணிக்கு பின்னடைவாகிவிடும்" என்றனர்.
அதிமுகவின் திட்டம் என்ன?
இதுபற்றி அதிமுக கிழக்கு மாநிலச் செயலர் அன்பழகனிடம் கேட்டதற்கு, "தற்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவி அதிமுகவசம்தான் உள்ளது. கோகுலகிருஷ்ணன் எம்பி பதவி காலம் 3 மாதங்களில் முடிவடையவுள்ளது. அதுபற்றி கட்சித் தலைமையிடம் தெரிவிப்போம். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெல்லவில்லை. இருப்பினும் பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதால் புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கேட்போம்” என்று குறிப்பிட்டார்.
புதுச்சேரி ஆளும் கூட்டணி கட்சிகளிடையே மாநிலங்களவை எம்பி பதவிக்காக அடுத்த அரசியல் நகர்வு தொடங்கிவிட்டது.