ரூ.7.15 கோடி சொத்து வாங்கிய சுற்றுச்சூழல் முன்னாள் அதிகாரி பாண்டியன், மனைவி மீது சொத்து குவிப்பு வழக்கு: லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை

ரூ.7.15 கோடி சொத்து வாங்கிய சுற்றுச்சூழல் முன்னாள் அதிகாரி பாண்டியன், மனைவி மீது சொத்து குவிப்பு வழக்கு: லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை
Updated on
1 min read

வருமானத்துக்கு அதிகமாக ரூ.7.15 கோடிக்கு சொத்து சேர்த்ததாக முன்னாள் சுற்றுச்சூழல் அதிகாரி பாண்டியன், அவரது மனைவி மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக இருந்தவர் எஸ்.பாண்டியன். தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் செயல்படுவதற்கு அனுமதி வழங்குவது, தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்கு இவர் லஞ்சம் வாங்குவதாகவும், தர மறுக்கும் நிறுவனங்களுக்கு சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்கள் வந்தன.

இதன் அடிப்படையில், பனகல் மாளிகையில் உள்ள அலுவலகம், சாலிகிராமத்தில் உள்ள பாண்டியனின் வீடு ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த டிசம்பர் 16-ம் தேதி சோதனை செய்தனர்.

இடைநீக்கம்

அங்கிருந்து, கணக்கில் வராத ரூ.1.37 கோடி ரொக்கம், ரூ.1.28 கோடி மதிப்புள்ள 3.5 கிலோ தங்கம், வைர நகைகள், ரூ.1.51 லட்சம் மதிப்புள்ள 3.5 கிலோ வெள்ளி நகைகள், ரூ.7 கோடி மதிப்புள்ள 18 சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் இடைநீக்கமும் செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் மேலும் ஆதாரங்களை திரட்டும் வகையில் பாண்டியனின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த 2-ம் தேதி மீண்டும் சோதனை செய்தனர். அப்போதும் சில ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து, கடந்த 2013 - 2020 காலகட்டத்தில் பாண்டியன் பெற்ற ஊதியம், வேறு சொத்துகள் மூலம் கிடைத்த வருவாய் ஆகியவை குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை செய்தனர். இதில் அவர், தனது வருமானத்தைவிட அதிகமாக ரூ.7.15 கோடி மதிப்பில் சொத்துகளை வாங்கி குவித்திருப்பது தெரியவந்தது.

இந்த சொத்துகளை தன் பெயரிலும், மனைவி லதா பெயரிலும் அவர் வாங்கியுள்ளதும் ஆவணங்கள் மூலம் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2 பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சமீபத்தில் வழக்கு பதிவு செய்தனா். இதுதொடர்பாக இருவரிடமும் விரைவில் விசாரணை நடத்த உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in