

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிகளில் முதியோர் மற்றும் விதவை உதவித் தொகைக்கான ஆணை மற்றும் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்களை உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி வழங்கினார்.
திருக்கோவிலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கொடியூர், அத்தண்டமருதூர், வடமருதூர் ஆகிய கிராமங்களில் ஏற்கெனவே, ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களில் நலத்திட்ட உதவிகள் நேற்று வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தகுதியான ஒரு பயனாளிக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, இரு பயனாளிகளுக்கு விதவை உதவித்தொகை பெறுவதற் கான ஆணைகளை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.
அதைத்தொடர்ந்து, வீரனாம்பட்டு கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.12.88 லட்சம் மதிப்பீட்டில் மயான சாலை அமைக்கும் பணியை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
இதையடுத்து வடமலையனூர் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.18,750 மானியத்தில் 2 விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடிக்கு தட்டு நாற்றுகள், செம்மை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.22,000 மானியத்தில் கோனோ வீடர் களை எடுக்கும் கருவிகள், பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் கரும்பு பயிரில் சொட்டு நீர் பாசனம் அமைத்திட ரூ.4,70,000 மானியத்தில் வேளாண் உபகரணங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் கி.சாய்வர்தினி, வேளாண் உதவி இயக்குநர் ராமர் மற்றும் உதவி வேளாண் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.