

புதுச்சேரி பாஜக மேலிடப் பொறுப்பாளர் ராஜீவ் சந்திரசேகர் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். மற்றொரு மேலிடப் பொறுப்பாளரான நிர்மல்குமார் சுரானாவுக்கும் விரைவில் உயர் பதவி தரப்படவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
புதுச்சேரி மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் பொறுப்பாளராக நிர்மல்குமார் சுரானா கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். அவர் தொடர்ந்து புதுச்சேரியில் முகாமிட்டு தேர்தல் பணியாற்றினார்.
தேர்தலுக்கு நெருக்கத்தில் கூடுதல் மேலிடப் பொறுப்பாளராக ராஜீவ் சந்திரசேகர் எம்பி நியமிக்கப்பட்டார். இவர்கள் இருவரும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அத்துடன் ஒவ்வொரு தொகுதிக்கும் கர்நாடகத்தைச் சேர்ந்த முக்கியமானவர்களை பொறுப்பாளர்களாக நியமித்து தேர்தல் பணியாற்றினர்.
புதுச்சேரியில் பாஜக முதல்முறையாக 6 தொகுதிகளில் வென்றது. அத்துடன் பேரவைத் தலைவர், இரு அமைச்சர்கள் பதவிகள் கூட்டணி அரசில் ஒதுக்கப்பட்டன. தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து மேலிடப் பொறுப்பாளர்களுக்கு பாஜக முக்கியப் பதவிகளை தரும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதன்படி, மேலிடப் பொறுப்பாளராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்த ராஜீவ் சந்திரசேகர் மத்திய அமைச்சராக தற்போது பதவியேற்றுள்ளார். இவருக்கு தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதைப்போல மற்றொரு மேலிடப் பொறுப்பாளரான நிர்மல்குமார் சுரானாவுக்கும் வெகு விரைவில் பாஜகவில் முக்கிய பதவி அளிக்கப்படவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.