

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜா பாத் ஒன்றியத்துக்குட்பட்ட வில்லிவலம் கிராமத்தில் வேகவதி ஆற்றின் கரையை ஒட்டி அமைந்துள்ளது இருளர் காலனி. இங்கு 60-க்கும் மேற்பட்ட இருளர் மக்கள் வசிக்கின்றனர். ஏறக்குறைய 17 குடிசைகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு, பல ஆண்டுகளாக மின்சார இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. இதனால் பள்ளி செல்லும் தங்கள் குழந்தைகள் படிக்க முடியாமல் போவதாக பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர். தங்கள் குடிசை வீடுகளுக்கு பட்டா, சாதி சான்றிதழ் கேட்டு பலமுறை விண்ணப்பித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என அம்மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, இருளர் மக்கள் கூறியதாவது: கல்வி அறிவு கிடைக்காமல் ஊருக்கு ஒதுக்குப் புறமாக வசிக்கும் எங்கள் நிலமை பிள்ளைகளுக்கும் வரக்கூடாது என்பதற்காக பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கிறோம். ஆனால், மின்சாரம் இல்லாததால் பிள்ளைகளால் பாடங்களை சரவர படிக்க முடியவில்லை.
மின் இணைப்புக்கோரி, சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் ஒன்றியக் குழுத் தலைவர், ஐயம்பேட்டை மின்சார வாரிய அலுவலகம் என அனைத்து தரப்பிலும் மனு அளித்துவிட்டோம். குடிசை வீடு என்பதால், இணைப்பு வழங்க வசதியாக வீட்டுக்கு வெளியே 5 அடி தற்காலிக சிமெண்ட் சுவரும் அமைத்துள்ளோம். ஆனால், மின் இணைப்பு வழங்க அதிகாரி கள் தயக்கம் காட்டுகின்றனர். பெயருக்கு ஏற்றார் போலவே நாங்கள் இருளில்தான் இருக்கி றோம் என்று கூறினர்.
இதுதொடர்பாக உத்திரமேரூர் எம்எல்ஏ கணேசனை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். வில்லிவலம் ஊராட்சி தலைவர் திலகவதி இளையராஜா கூறும் போது, ஊராட்சிக்கு முறையாக வரி செலுத்தும் இருளர் மக்களின் குடிசை வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவது தொடர் பாக, ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி எம்எல்ஏ மற்றும் மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்துள்ளோம். ஆனால், மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இருப்பினும் இருளில் படிக்கும் பிள்ளைகள்தான் ஒன்றிய அளவில் முதலிடம் பெற்றுள்ளனர். அவர்களின் கல்வி அறிவு மேம்படு வதற்காக, மாவட்ட நிர்வாகம் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஐயம்பேட்டை மின்சார வாரிய உதவி செயற் பொறியாளர் தாரா கூறியதாவது: ஒரு லைன் மின் இணைப்பு திட்டத் தில் தற்போது மின் இணைப்பு வழங்க முடியாத நிலை உள்ளது. அதனால், வில்லிவலம் இருளர் மக்களின் குடிசை வீடுகளுக்கு, மின் இணைப்பு வழங்குவது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.