

மதுரை டிஆர்ஓ காலனியைச் சேர்ந்தவர் கலைமோகன். நகர் காவல் உதவி ஆணையராக பணியாற்றிய இவர் 2012 மே 31-ல் ஓய்வு பெற்றார். ஓய்வு பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவருக்கு எதிரான நடவடிக்கையால் ஓய்வூதியம் உள்ளிட்ட பணப் பலன்களை நீதிமன்றம் மூலம் உத்தரவு பெற்று 2018-ல் வாங்கினார்.
2012-2018-ம் ஆண்டுக் குரிய விடுமுறைக் கால பணிக்கொடைக்கான நிலுவைத் தொகைக்கு வட்டியோடு ரூ.4.40 லட்சத்தைப் பெற நீதிமன்ற உத்தரவு பெற்றார். பணிக்கொடை வழங்க மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு தனி உத்தரவு ஒன்றும் பிறப்பிக்கப்பட்டாலும், இதுவரை அத்தொகையைப் பெற முடியாமல் போராடுவதாக கலைமோகன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், பணிக்கொடைக்கான ( கிராஜுட்டி) தொகைக்கு 12 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என 2019 செப். 27-ல் உயர் நீதிமன்றக் கிளையில் உத்தரவு பெற்றேன். இந்த உத்தரவை நிறைவேற்றாத நிலையில், மீண்டும் நீதிமன்றத்தை அணுகி, 2021 ஏப். 27-ல் மேலும் ஓர் உத்தரவைப் பெற்றாலும் இன்னும் கிடைக்கவில்லை.
மாவட்ட கருவூல அலுவலகம் இதற்கான தொகையை வழங்கலாம் என பரிந்துரைத்தபோது, அவர்களும் தங்களால் வழங்க இயலாது எனக் கூறி சம்பளக் கணக்கு அலுவலகத்துக்கு எனது கோப்புகளை கடந்த மாதம் 9-ம் தேதி அனுப்பினர். அவர்களும் இத்தொகையை நாங்கள் வழங்க முடியாது எனக் கூறி மீண்டும் மதுரை நகர் காவல் ஆணையர் அலுவலகத்துக்கே திருப்பிவிட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து ஓய்வூதிய இயக்குநர் அலுவலகத்துக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. யாருக்கு என்ன அதிகாரம் எனத் தெரியாமல் அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர். காவல் ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.