Last Updated : 09 Jul, 2021 03:15 AM

1  

Published : 09 Jul 2021 03:15 AM
Last Updated : 09 Jul 2021 03:15 AM

அறந்தாங்கியை தனி மாவட்டமாக அறிவிக்க எதிர்பார்ப்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்துடன் இணைந்துள்ள அறந்தாங்கியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து தமிழக அரசை வலியுறுத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களை பிரித்து 1974-ல் புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது. தற்போது இம்மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய 2 நகராட்சிகள், ஆலங்குடி, இலுப்பூர், அரிமளம், கீரனூர், கறம்பக்குடி, பொன்னமராவதி, கீரமங்கலம், அன்னவாசல் ஆகிய 8 பேரூராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்களில் சுமார் 16.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.

மேலும், புதுக்கோட்டை, அறந்தாங்கி, இலுப்பூர் ஆகிய 3 வருவாய் கோட்டங்கள், 12 வட்டங்கள் மற்றும் 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

இந்நிலையில், பரந்து விரிந்த மாவட்டமாக இருப்பதால் அரசின் திட்டங்கள் எளிதாக மக்களை சென்றடையவும், தங்களுடைய தேவைகளை மக்கள் விரைந்து நிறைவேற்றிக் கொள்ளவும் அறந்தாங்கியை தனி மாவட்டமாக உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசை வலியுறுத்தும் பதிவுகள் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக வைரலாகி வருகின்றன. ஒருங்கிணைப்புக் குழுவும் அமைக்கப் பட்டுள்ளதுடன் முதல் கட்ட ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்று உள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களையும், திருவரங்குளம், அரிமளம், திருமயம் ஆகிய ஒன்றியங்களில் சில ஊராட்சிகளையும், அருகில் உள்ள தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டத்தில் உள்ள சில ஊராட்சிகளையும் பிரித்து அறந்தாங்கியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கலாம். இதனால், ஆட்சியர் அலுவலகம் செல்வதற்கு மக்கள் தொலை தூரம் செல்ல வேண்டியது தவிர்க்கப்படும் என்றார்.

இதுகுறித்து கல்லணைக் கால்வாய் பாசனதாரர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்வேலன் கூறியது:

அறந்தாங்கியில் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம், வேளாண் பொறியியல் துறை அலுவலகம் போன்ற பிரத்யேக அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள், சிறைச் சாலை, மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம், போக்குவரத்து பணிமனை போன்ற அலுவலகங்களும் உள்ளன.

எனவே, அனைத்து வகையிலும் சாத்தியக்கூறுகளைக் கொண்டிருப்பதால் அறந்தாங்கியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

நடைபெற உள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே இக்கோரிக்கையை நிறைவேற்றித் தரும் வகையில் அனைத்து வகையான முயற்சிகளிலும் இறங்கியுள்ளோம்.

தமிழக முதல்வர், அமைச்சர்களை நேரில் சென்று வலியுறுத்த உள்ளோம். இக்கோரிக்கை நிறைவேறினால்தான் இப்பகுதியும் ஓரளவுக்கேனும் அனைத்து வகையிலும் வளர்ச்சி அடையும் என்றார்.

இதுகுறித்து அறந்தாங்கி எம்எல்ஏ எஸ்.டி.ராமச்சந்திரன் கூறியது:

அறந்தாங்கி புதிய மாவட்டம் உருவாவதை வரவேற்கி றேன். இதை உருவாக்குவதற்கு எனது பங்களிப்பாக மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை விரைந்து நிறைவேற்றுவேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x