

உரிமம் பெறாத காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 17 குழந்தைகள் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தால் மீட்கப்பட்டு, உரிமம் பெற்ற காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.
கரூர் மாவட்டம் வெள்ளியணையில் உள்ள ராகவேந்திரா காப்பகத்தில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி, ஆணைய உறுப்பினர்கள் வீ.ராமராஜ், மல்லிகை ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கு 12 சிறுவர்கள், 5 சிறுமிகள் என 17 குழந்தைகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
ராகவேந்திரா தொடக்கப் பள்ளி என உரிமம் பெற்றிருந்த நிலையில், குழந்தைகள் காப்பகம், விடுதி ஆகியவற்றுக்கு உரிமம் பெறவில்லை. காப்பகம், விடுதிக்கு உரிமம் பெறாத நிலையில், கரோனா ஊரடங்கால் பள்ளி செயல்படாத நிலையில் 17 குழந்தைகள் அதுவும் தொடக்கப் பள்ளியில் பயில்வதற்கு மேல் வயதுள்ள குழந்தைகளை அங்கு தங்க வைத்திருந்தது குறித்து பாதுகாப்பு ஆணையம் சார்பில் காப்பகத்தினரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும், அங்கிருந்து 17 குழந்தைகளும் மீட்கப்பட்டு, உரிமம் பெற்ற காப்பகத்துக்கு அனுப்பப்பட்டனர்.
முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, கரோனா ஊரடங்கு நேரத்தில் பள்ளி திறந்ததற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்தார். இதையடுத்து, அந்த காப்பகம் மூடப்பட்டது.