

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பாசனத்துக்காக பாபநாசம், மணிமுத்தாறு அணை களில் இருந்து 1,750 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கார் சாகுபடி பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து பெருமளவுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையிலிருந்து நேற்று காலையில் 1,504 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணைக்கு விநாடிக்கு 597 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர்மட்டம் 118.50 அடியாக இருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையிலிருந்து 250 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணைக்கு 87 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் நீர்மட்டம் 77.20 அடியாக இருந்தது.
அணைகளில் இருந்து 1,750 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து சுத்தமல்லி தடுப்பணை உள்ளிட்ட தடுப்பணைகளுக்கு சென்று ஏராளமானோர் குளிக்கின்றனர் .
மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பாளையங்கோட்டையில் 10 மி.மீ., திருநெல்வேலியில் 1 மி.மீ., களக்காட்டில் 15.4 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
156 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணையில் நீர்மட்டம் 110.83 அடியாகவும், 50 அடி உச்சநீர்மட்டம் கொண்ட வடக்கு பச்சையாறில் நீர்மட்டம் 16.20 அடியாகவும், 22.96 அடி உச்சநீர்மட்டம் கொண்ட நம்பியாறு அணையில் நீர்மட்டம் 11.93 அடியாகவும் இருந்தது.