முறையான அனுமதியின்றி செம்மண் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

திருச்செந்தூர் அருகே நடுநாலுமூலைக்கிணறு பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் அனுமதியின்றி அளவுக்கு அதிகமாக செம்மண் எடுக்கப்பட்ட பகுதியை ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.
திருச்செந்தூர் அருகே நடுநாலுமூலைக்கிணறு பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் அனுமதியின்றி அளவுக்கு அதிகமாக செம்மண் எடுக்கப்பட்ட பகுதியை ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் முறையான அனுமதியின்றி செம்மண் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் நடுநாலுமூலைக்கிணறு பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டப்பகுதியில் முறையான அனுமதியின்றி அதிகஅளவில் செம்மண் எடுப்பதாக புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்கி.செந்தில்ராஜ், நடுநாலுமூலைக் கிணறு பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார்.

அப்போது அப்பகுதியில் அதிகஅளவில் செம்மண் எடுக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. எந்த அடிப்படை மற்றும் அனுமதியில் செம்மண் எடுக்கப்பட்டது என்பது குறித்து வருவாய்த்துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவிட்டார்.

மாவட்டத்தில் முறையான அனுமதியின்றி செம்மண் வெட்டிஎடுப்பவர்கள் மீது வருவாய்த்துறை மூலம் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, கனிம வள சட்டத்தின்படி காவல் துறையின் மூலம் குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

ஆய்வின்போது திருச்செந்தூர் கோட்டாட்சியர் கோகிலா, துணை வட்டாட்சியர் பாலசுந்தரம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர் .

முன்னதாக திருச்செந்தூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து ஆட்சியர் ஆய்வு நடத்தினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:

புதிய குடிநீர் திட்டம்

திருச்செந்தூர் பேரூராட்சிக்கு குரங்கணி அருகில் தாமிரபரணி ஆற்றில் இருந்து தினசரி 2.10 எம்எல்டி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கூடுதலாக இப்பகுதியில் இருந்து 3 எம்எல்டி குடிநீர் எடுக்கும் வகையில் புதிய குடிநீர் திட்ட வரைவு தயார் செய்ய வேண்டும். திருச்செந்தூர் பேரூராட்சி பகுதியில் உள்ள 11,000 வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செயல்படுத்தப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டத்தில் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களையும் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

திருச்செந்தூர் பகுதியில் பெறப்படும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை கிடங்குக்கு கொண்டு செல்ல 10 வாகனங்கள் வாங்கிட கருத்துருக்களை உடனடியாக அனுப்ப வேண்டும். திருச்செந்தூர் பேரூராட்சி பகுதியை தூய்மையாக பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்து திட்ட வரைவுகளை தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், பேரூராட்சிகள் மண்டல உதவி இயக்குநர் சேதுராமன், ஏரல் வட்டாட்சியர் இசக்கிராஜ், பேரூராட்சி செயல் அலுவலர்கள் திருச்செந்தூர் ஆனந்தன், ஏரல் முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in