

டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''டெல்லியில் உள்ள ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுப்பியயாகக் கூறி அப்பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் கன்ஹையா குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு நாடெங்கும் உள்ள கல்வி நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ்., ஏபிவிபி போன்ற அமைப்புகளின் தலையீடு அதிகரித்துள்ளது. இதனால் கல்வி நிறுவனங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மாணவர்கள் கைதை கண்டித்த இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜாவின் மகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது. தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். புகழ்பெற்ற ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பெருமையைக் காப்பாற்ற பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.