பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்: முதல்வன் சினிமா பட பாணியில் ஆட்சியர் அமர் குஷ்வாஹா நடவடிக்கை

ஆலங்காயம் அடுத்த மல்லிக்குட்டை கிராமத்தில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டி வரும் வீட்டை நேற்று ஆய்வு செய்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா.
ஆலங்காயம் அடுத்த மல்லிக்குட்டை கிராமத்தில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டி வரும் வீட்டை நேற்று ஆய்வு செய்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா.
Updated on
2 min read

ஆலங்காயம் ஒன்றியத்தில் ஆய்வுக்கு சென்ற திருப்பத்தூர் ஆட்சியர் அமர் குஷ்வாஹா, முதல்வன் சினிமாபட பாணியில், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளரை ‘சஸ்பெண்ட்’ செய்து நேற்று உத்தரவிட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேற்று ஆய்வு மேற் கொண்டார். இதையடுத்து, 102 ரெட்டியூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராணிப்பேட்டை கிராமத்தில் நடை பெற்று வரும் 100 நாள் வேலை திட்டப்பணிகளை ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு, 100 நாள் வேலை திட்டப்பணியாளர்களிடம் குறைகளை கேட்டார்.

அப்போது, கடந்த ஆண்டு செய்த வேலைகளுக்கான சம்பளம் வழங்கப்பட்டுள்ளதா? நடப்பாண்டில் முறையான சம்பளம் வழங்கப்படுகிறதா? என பணியாளர்களிடம் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து, 100 நாள் வேலை திட்டப்பணியாளர்களின் தினசரி வேலை அட்டையை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

பின்னர், மல்லிக்குட்டை கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் பிரதம மந்திரியின் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீட்டை ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது, கோவிந்தராஜ் கட்டி வரும் வீட்டின் பட்டாவை வாங்கி பார்த்தபோது அவரது தந்தை பெயரில் பட்டா இருப்பது தெரியவந்தது. இதைக்கண்டு ஆவேசமடைந்த ஆட்சியர் அமர் குஷ்வாஹா, கோவிந்தராஜ் தந்தை பெயரில் பட்டா இருக்கும் போது, கோவிந்தராஜ் பெயரில் வீடு கட்ட பணி ஆணை வழங்கி யது எப்படி? என ஊராட்சி செயலாளர் ஆனந்தனிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, ஊராட்சி செயலாளர் ஆனந்தன் முறையான பதில் அளிக்காமல் மழுப்பியதால், அவரை சஸ்பெண்ட் செய்து ஆட்சியர் அமர் குஷ்வாஹா அங்கேயே உத்தரவிட்டார்.

முதல்வன் சினிமா பட பாணியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்த இடத்திலேயே முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்தது அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து, ஆட்சியர் அமர் குஷ்வாஹா கூறும்போது, ‘‘ஒவ்வொரு ஊராட்சி செயலாளர் களும் கிராம வளர்ச்சிக்கு உண்மை யாக பணியாற்ற வேண்டும். அதேபோல, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். அரசின் விதிமுறைகளை அரசு அலுவலர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். ஊராட்சி ஒன்றியங்களில் எம்பி, எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்து நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முறையாக செய்ய வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் குளறுபடி வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.மேலும், முதலமைச்சரின் குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் மனு அளித் துள்ளவர்களுக்கான தீர்வுகளை அரசு அலுவலர்கள் முறையாக மேற்கொள்ள வேண்டும்.

காரணம் இல்லாமல் மனுக்களை நிராகரிக்கக்கூடாது. தகுதியுள்ள மனுக்கள் நிராகரிக்கப்பட்டது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

அப்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் விநாயகம், ஒன்றிய பொறியாளர் செல்வி உட்பட பலர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in