

மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவராக இருந்து பதவி விலகிய மகேந்திரன், இன்று திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தொண்டர்களுடன் அக்கட்சியில் இணைந்தார். அத்துடன் 11 ஆயிரம் தொண்டர்கள் கொண்ட பட்டியலையும் அளித்தார்.
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கியதிலிருந்து அவருடன் பயணித்தவர் மகேந்திரன். மருத்துவரான மகேந்திரன் தனி அமைப்பு ஒன்றை நடத்தி வந்தார். பின்னர் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். கட்சியின் ஆரம்பக்காலத் தலைவர்களில் ஒருவராக, துணைத் தலைவராக கமலுடன் இணைந்து பயணித்தார்.
மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட மகேந்திரன் மூன்றாவது இடத்தில் வந்தார். அவர் வாங்கிய வாக்குகள் 1,45,082 ஆகும். 11.6% வாக்குகளை அவர் பெற்றார். இதனால் மகேந்திரன் பிரபலமானார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியை கமல்ஹாசன் தேர்வு செய்ததால் மகேந்திரன் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டார்.
இந்தத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தில் ஒருவரும் வெற்றி பெறவில்லை. இதனால் கட்சி நிர்வாகிகள் அனைவரும் பதவி விலகுவார்கள் என்று கமல் அறிவித்தார். பிறகு மகேந்திரன் கட்சியிலிருந்து விலகினார். கட்சியில் ஜனநாயகம் இல்லை எனப் பேட்டி அளித்தார்.
''களைய வேண்டிய துரோகிகளின் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் மகேந்திரன். தன்னை எப்படியும் நீக்கி விடுவார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு புத்திசாலித்தனமாக விலகிக் கொண்டார். ஒரு களையே தன்னைக் களையென்று புரிந்துகொண்டு நீங்கிக்கொண்டதில் மகிழ்கிறேன்'' என்று கமல்ஹாசன் கடுமையாக மகேந்திரனை விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் அரசியலிலிருந்து விலகி அமைதியாக இருந்தார் மகேந்திரன். திமுகவில் இணைவார் என்று கூறப்பட்டாலும் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. இதனிடையே கொங்கு மண்டலத்தில் கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் திமுக இறங்கியுள்ளது. இதற்கான நடவடிக்கையில் முதற்படியாக அதிமுக முன்னாள் அமைச்சர் பழனியப்பன் திமுகவில் இணைந்தார். இன்று மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய கொங்கு மண்டலப் புள்ளி மகேந்திரன் திமுகவில் இணைந்துள்ளார்.
தன்னுடன் கட்சி நிர்வாகிகள் 78 பேர் இணைவதாகவும், கரோனா பெருந்தொற்று காரணமாக கட்சித் தொண்டர்கள் 11,000 பேர் கொண்ட பெயர்ப் பட்டியலை திமுக தலைவரிடம் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். அதன்படி இன்று மாலை 5 மணி அளவில் கட்சி நிர்வாகிகளுடன் திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.