

'எந்திரன்' கதை விவகாரத்தில் எதிர்மனுதாரர் ஆரூர் தமிழ்நாடன் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அனுமதி கோரிய வழக்கில், உயர் நீதிமன்றம் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான 'எந்திரன்' படத்தின் கதை தன்னுடையது எனக் கூறி, இயக்குநர் ஷங்கருக்கு எதிராக எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அனுமதி கோரி ஆரூர் தமிழ்நாடன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மனுவைத் தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து ஆரூர் தமிழ்நாடன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, சட்டப்படி இதுபோன்ற வழக்குகளில் மேல் முறையீடு செய்ய சில வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வரம்புக்குள் இந்த மனு வராது என்பதால், இது விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் கூறி ஆரூர் தமிழ்நாடன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.