

பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் உள்ள பிற சமூகச் செயற்பாட்டாளர்களை மத்திய அரசு உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய ஸ்டேன் சுவாமி, பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேசியப் புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
முதுமை மற்றும் பார்க்கின்சன் உட்படப் பல்வேறு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, மே மாதம் மும்பை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்டேன் சுவாமிக்கு கரோனா தொற்று உறுதியானது. இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி ஜூலை 5-ம் தேதி அவர் உயிரிழந்தார்.
சமூகச் செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி (84) உயிரிழப்புக்கு மத்திய அரசே காரணம் என்று கூறி, மத்திய அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா தலைமை வகித்தார்.
மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ரங்கராஜன், வெற்றிச்செல்வன், மாவட்டக் குழு உறுப்பினர் அன்வர் மற்றும் பல்வேறு கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் தேசிகன், விடுதலைச் சிறுத்தைகள் அருள், மதிமுக சோமு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கபியூர் ரகுமான், அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் ஷேக் அப்துல்லா உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் குறித்து மாவட்டச் செயலாளர் ராஜா கூறும்போது, ''பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய ஸ்டேன் சுவாமியைப் பிணையில் வெளியே வர முடியாத பிரிவில் மத்திய அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. ஐ.நா. சபை மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் பலர் வலியுறுத்தியும் ஸ்டேன் சுவாமியை வெளியே விடவில்லை. இதுபோன்ற செயல்பாடுகளை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் உள்ள பிற சமூகச் செயற்பாட்டாளர்களை மத்திய அரசு உடனே விடுதலை செய்ய வேண்டும். டெல்லியில் மாணவர்கள், பத்திரிகையாளர்கள் மீதும், மும்பையில் பல்வேறு சமூகச் செயற்பாட்டாளர்கள் மீதும், சிறுபான்மை இயக்கத்தினர் மீதும் பதிவு செய்துள்ள உபா சட்டத்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்'' என்று தெரிவித்தார்.