

காமராஜர் மணி மண்டபம் விரைவில் திறக்கப்படும் என்று ஆய்வுக்குப் பின்பு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். 14 ஆண்டுகளாகக் கட்டுமானப் பணி நடப்பதுடன், இரண்டு முறை அடிக்கல் நாட்டப்பட்டு இப்பணி இறுதிக்கட்டத்துக்கு வந்துள்ளது.
புதுச்சேரியில் 2007ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக ரங்கசாமி இருந்தபோது கருவடிக்குப்பம் சித்தானந்தா கோயில் அருகே ரூ.14 கோடியில் 3.75 ஏக்கரில் காமராஜருக்கு மணி மண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டினார்.
இதனையடுத்து 2009ஆம் ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக இந்தப் பணி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து 2014ஆம் ஆண்டு ரூ.24 கோடி ஹட்கோ கடனுதவியில் மீண்டும் கட்டுமானப் பணி தொடங்கியது. அப்போது முதல்வராக இருந்த ரங்கசாமி 2-வது முறையாக காமராஜர் மணி மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த மணி மண்டபத்தில், ஐஏஎஸ் பயிற்சி மையம், உலகத்தரம் வாய்ந்த நூலகம், 130 பேர் அமரக்கூடிய ஆடிட்டோரியம், 4,417 சதுர அடி தரைத்தளம், காமராஜர் சிலை, அவரது வாழ்க்கை வரலாற்றுப் புகைப்படக் கண்காட்சி உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை 90 சதவிகிதப் பணிகள் முடிவடைந்துள்ளன.
இந்த நிலையில் முதல்வர் ரங்கசாமி அதிகாரிகளுடன் காமராஜர் மணி மண்டபம் சென்று இன்று ஆய்வு மேற்கொண்டார். மணி மண்டபம் முழுவதும் சுற்றிப் பார்த்த அவர், அதிகாரிகளிடம் பணிகள் குறித்துக் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி கூறுகையில், "புதுவை காமராஜர் மணி மண்டபப் பணிகள் ஏறக்குறைய முடிவடைந்துவிட்டன. இன்னும் 10 அல்லது 15 நாட்களில் மணி மண்டபம் திறக்கப்படும். அழகிய வடிவில் அமைந்துள்ள இந்த மண்டபம் மாணவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இங்கு ஐஏஎஸ் பயிற்சி வகுப்பு தொடங்கப்படும், உலகத்தரம் வாய்ந்த நூலகம் அமைக்கப்படும்" என்று குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கப்படாதது குறித்துக் கேட்டதற்கு, "நான் மணி மண்டபத்தைப் பார்வையிட வந்தேன்" என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.