

மகளிர் சுயஉதவிக்குழு பயிற்றுநர்களுக்கு அம்மா கைபேசிகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். சென்னை தாடண்டர் நகரில் ரூ.100 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு அலுவலர் குடியிருப்புகளையும் அவர் திறந்துவைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பொதுப்பணித் துறை சார்பில் சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் ரூ.100 கோடியே 54 லட்சம் செலவில் அரசு அலுவலர்களுக்கு புதிதாக 700 ‘சி’ வகை குடி யிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்த குடியிருப்புகளை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் நேற்று திறந்துவைத்தார்.
சென்னை தரமணியில் நீர்வள ஆதாரத் துறை சார்பில் ரூ.5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மாநில நீர் ஆதார மேலாண்மை முகமை அலுவலகம், அரியலூர் வட்டம் கொள்ளிடம் ஆற்றின் இடதுகரையில் அழகிய மணவாளம், மேலராமநல்லூர் கிராமங்களை இணைக்கும் வகையில் ரூ.48 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலம், பெரம்பலூர் மாவட்டம் தொண்டமாந்துறை கிராமத்தில் ரூ.33.07 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட நீர்த்தேக்கம் உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ரூ.158 கோடியே 34 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பொதுப்பணித் துறை அலுவலக கட்டிடங்கள், பாலங்கள், நீர்த் தேக்கம், அணைக்கட்டு, தடுப்ப ணைகள், படுகை அணைகள், செயற்கை நிலத்தடி நீர்செறி வூட்டும் கட்டுமானங்கள், கீழ்மட்ட நிலத்தடி தடுப்பு சுவர் ஆகிய வற்றையும் முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார். அத்துடன், ரூ.626 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டிலான பொதுப்பணித் துறை திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
நிதித்துறை சார்பில் தூத்துக்குடி, திருவள்ளூர், தேனி, ஈரோடு, தருமபுரி, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.11 கோடியே 78 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாவட்ட கருவூல அலுவலக கட்டிடங்கள், 18 சார்-கருவூல அலுவலக கட்டிடங்களையும் முதல்வர் திறந்துவைத்தார்.
ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ரூ.273 கோடியே 44 லட்சம் செலவில் கட்டப் பட்டுள்ள கட்டிடங்களையும் திறந்து வைத்த முதல்வர், சமுதாய சுயஉதவிக்குழு பயிற்றுநர்களுக்கு ரூ.15 கோடி மதிப்பீட்டில் ‘அம்மா கைபேசி’ வழங்கும் திட்டத் தையும், ரூ.807 கோடியே 26 லட்சம் மதிப்பிலான 38,441 சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தையும் தொடங்கிவைத்தார். ‘அம்மா கைபேசி’ திட்டத்தின்கீழ் சமுதாய பயிற்றுநர்களுக்கு கைபேசியுடன் சிம் கார்டும் இலவசமாக கொடுக்கப்படும். சிம்கார்டு பயன்பாட்டுக்கான மாதாந்திர கட்டணத்தை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனமே ஏற்றுக்கொள்ளும். முதல்கட்டமாக 20 ஆயிரம் பயிற்றுநர்களுக்கு ‘அம்மா கைபேசி’ வழங்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, இயக்குநர் கே.பாஸ்கரன், மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் வி.அமுதவல்லி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.