

திமுக கூட்டணியில் தேமுதிக இணையுமா? என, தமிழகமே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்க, திமுகவுடன், காங்கிரஸ் கைகோத்ததுமே, கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்சாகமாக வலம் வருகின்றனர் இவ்விரு கட்சியினரும். இதற்குக் காரணம் கடந்த கால வரலாறுதான்.
தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு வலுவான வாக்கு வங்கி இருப்பது கன்னியாகுமரி மாவட்டத்தில்தான். விருதுநகர் தோல்விக்குப் பின், காமராஜரை வெற்றிபெற வைத்தது முதலே இந்த வரலாறு தொடங்குகிறது.
கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலின்போது தமிழகம் முழுவதும் இலங்கைத் தமிழர் விவகாரம் பற்றி எரிந்தது. அப்போதும் இம்மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.
அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலின்போதும் பாஜக - காங்கிரஸ் கட்சிகளுக்குள் தான் போட்டியே நடைபெற்றது. அதிமுக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட, திமுகவுக்கு டெபாசிட் காலியானது.
மாவட்டத்தில் சிறுபான்மையினர் வாக்குகள் கணிசமாக உள்ளன. அவர்கள் திமுக - காங்கிரஸ் கூட்டணியைத் தொடர்ந்து ஆதரித்து வந்ததன் அண்மைக்கால உதாரணங்கள்தான் இவை. கடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவும், காங்கிரஸ் கட்சியும் தனித்து களம் காண, சிறுபான்மை இன மக்களின் வாக்குகள் சிதறின. பாஜக வெற்றி பெற்றது. இத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் - திமுக கூட்டணி உருவாகியுள்ள நிலையில், இரு கட்சியினரும் தொகுதியைக் கேட்டு பெறுவதில் முனைப்பு காட்டி வருகின்றனர்.
ஈடுகொடுக்குமா அதிமுக?
திமுக, காங்கிரஸ் கூட்டணி குமரி மாவட்டத்தில் சிறுபான்மை மக்களை குறி வைத்து பணியைத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக என்ன செய்யப் போகிறது என அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் தளவாய்சுந்தரத்திடம் கேட்டபோது, `தமிழக அரசு ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அவை அனைத்தும், அனைத்து தரப்பு மக்களுக்கும் நியாயமாக கிடைத்துள்ளது. அதிமுகவை தங்கள் பாதுகாப்பு அரணாக சிறுபான்மை மக்கள் பார்க்கின்றனர்.
படித்தவர்கள் நிறைந்த குமரி மாவட்டம், 2-ஜி அலைக்கற்றை ஊழலில் சிக்கிய கட்சிகளை எப்படி ஆதரிக்கும்? நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த காங்கிரஸ், தமிழகத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த திமுக, இவர்கள் இருவரும் சேர்ந்து ஊழல் செய்யவே துடிக்கிறார்கள் என்பதை படித்தவர்கள் நிறைந்த இந்த மண்ணில் புரிந்து கொள்வார்கள்’ என்றார்.
சிறுபான்மை மக்களின் வாக்குகள் பெரும்பான்மையாக உள்ள இம்மாவட்டத்தில் மக்களின் மனநிலை போகப் போகத்தான் தெரியும்.