

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி கையிருப்பில் இல்லாததால் பல மையங்கள் மூடப்பட்டன. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கரோனா பரவலைத் தடுக்க கோவாக்சின், கோவிஷீல்டு ஆகியதடுப்பூசிகள் போடும் பணி இந்தியாமுழுவதும் கடந்த ஜன.16-ம் தேதி தொடங்கப்பட்டது. தமிழகத்தில் மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு வரும் நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் இரவு நிலவரப்படி 1.59 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. நேற்று காலை சில ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருந்ததால் குறைவான மையங்களில் மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி இல்லாததால் பல மையங்கள் மூடப்பட்டன. இதனால் தடுப்பூசிபோட வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “ஜூலை மாதத்துக்கு 71 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு தமிழகத்துக்கு ஒதுக்கியுள்ளது. இதில், முதல்கட்டமாக வந்த 10 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டு விட்டன. அடுத்ததாக 11-ம் தேதி வரவுள்ளது. கையிருப்பில் இருக்கும் சில ஆயிரம் தடுப்பூசிகள் மட்டும் போடப்படுகிறது. இதனால், பலமையங்கள் மூடப்பட்டுள்ளன. தடுப்பூசிகளை விரைந்து வழங்கும்படிமத்திய அரசிடம் கேட்டிருக்கிறோம்.
சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரும் 9-ம் தேதி (நாளை) டெல்லிசென்று மத்திய சுகாதாரத் துறைஅமைச்சரை சந்திக்க உள்ளனர். அப்போது, தமிழகத்துக்கு விரைவாக அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகளை வழங்கும்படி வலியுறுத்துவார்கள்” என்றனர்.