

டெண்டர்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியதில் ரூ.5.89 கோடிலஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்டவழக்கில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற ஐசிஎப் தலைமை பொறியாளரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் மேலும் சில அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
சென்னை பெரம்பூரில் உள்ளஐசிஎப் (ரயில் பெட்டி தொழிற்சாலை) முதன்மை தலைமைப் பொறியாளராக இருந்தவர் காத்பால். இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். காத்பால் பணியில்இருந்தபோது ஐசிஎப் டெண்டர்களை தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனியார் நிறுவனத்துக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் ரூ.5 கோடியே 89 லட்சம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காத்பால் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரை சிபிஐ அதிகாரிகள் கடந்த 5-ம் தேதி கைது செய்தனர். அத்துடன் சென்னையில் இயங்கும் யுனிவர்சல் இன்ஜீனியர்ஸ் என்றநிறுவனத்தின் இயக்குநர் அம்சாவேணுகோபால், ஓம் பிரகாஷ், கேட்மால் ஜெயின் மற்றும் காத்பாலின் சகோதரர் சஞ்சை காத்பால் ஆகியோரை கைது செய்த சிபிஐ, டெல்லி மற்றும் சென்னையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளது.
ஐசிஎப் தலைமை மெக்கானிக் பொறியாளராக காத்பால் பணியாற்றியபோது அம்சா வேணுகோபாலுக்கு சாதகமாக இருந்ததற்காக ரூ.5.89 கோடி அளவுக்கு லஞ்சம் வழங்கியது சிபிஐ விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கு தொடர்பாக காத்பாலுக்கு சொந்தமாக டெல்லிமற்றும் சென்னையில் உள்ள இடங்களில் சிபிஐ அதிகாரிகள் 3-வது நாளாக நேற்றும் சோதனைநடத்தினர். முதல் நாள் சோதனையில், 2 கோடியே 75 லட்சம் ரொக்கம், 23 கிலோ தங்கம் மற்றும் சொத்து ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இரண்டாவது நாள் நடத்தப்பட்ட சோதனையில், வங்கி வைப்புத் தொகை ரூ.4.28 கோடி மற்றும் சொத்து ஆவணங்களும், இரண்டு வங்கி லாக்கர்களின் சாவிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த வங்கி லாக்கர்களில் சோதனை செய்ததில், ஏராளமான சொத்து ஆவணங்கள் இருந்தன. அந்த சொத்து ஆவணங்களின் மதிப்பை கணக்கிடும் பணி நடந்து வருவதாக சிபிஐ கூறியுள்ளது. காத்பாலின் 2 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. இந்த டெண்டர் முறைகேட்டில் மேலும் சில ஐசிஎப் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடமும் விசாரணை நடத்தி வருவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.