

தமிழக பாஜக தலைவரான எல்.முருகன் மத்திய அமைச்சராகியுள்ளதால், புதிய தலைவராக அண்ணாமலைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாகஅக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து 2-வது முறையாக 2019 மே 30-ம் தேதி பதவியேற்றது. இரு ஆண்டுகளுக்குப் பிறகு, மத்திய அமைச்சரவையை பிரதமர் மோடி மாற்றி அமைத்துள்ளார். அதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பாஜ கட்சி விதிகளின்படி ஒருவர் ஒரு பதவியில் மட்டுமே இருக்க முடியும். கட்சிப் பதவியில் இருப்பவர்கள், அரசுப் பதவிகளில் அங்கம் வகிக்க முடியாது.
2014-ல் மாநிலத் தவைவராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சரானதால், தமிழிசை சவுந்தரராஜன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.
2019 செப்டம்பர் 1-ம் தேதி தெலங்கானா ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டார். அதன்பிறகு 7 மாதங்கள் காலியாக இருந்த தமிழக பாஜக தலைவர் பதவியில், தேசிய பட்டியலின ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த எல்.முருகன் நியமிக்கப்பட்டார்.
தற்போது அவர் மத்திய அமைச்சராகியுள்ளதால், தமிழக பாஜகவுக்கு விரைவில் புதிய தலைவர் நியமிக்கப்படஉள்ளார்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தஅண்ணாமலை, கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். 'கர்நாடக சிங்கம்' என்று அழைக்கப்படும் அளவுக்கு பிரபலமான அவர், தனது ஐபிஎஸ் பணியை ராஜினாமா செய்து விட்டு, 2020 ஆகஸ்ட் மாதம் பாஜகவில் இணைந்தார். உடனடியாக அவருக்கு பாஜக மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
கடந்த ஏப்ரலில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு அவர் தோல்வி அடைந்தார். எனவே, அவருக்கு மாநிலத் தலைவர் பதவி வழங்க அதிக வாய்ப்புஇருப்பதாக பாஜகவினர் தெரிவிக்கின்றனர். ஆனாலும், தற்போது பாஜக மகளிரணி தேசியத் தலைவராக உள்ள வானதி சீனிவாசன் எம்எல்ஏ, சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில துணைத் தலைவர்கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோரை பாஜக மேலிடம் பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, தேசிய அமைப்பு பொதுச் செயலர்பி.எல்.சந்தோஷ், தமிழக பாஜகபொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், விரைவில் புதிய தலைவர்அறிவிப்பு வெளியாகும் என்றும்பாஜக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.